உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பட்டம் வென்றார் பி.வி.சிந்து

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் இந்தப் பட்டத்தை வெல்லும் முதல் இந்தியர் என்ற சாதனையையும் பி.வி.சிந்து படைத்துள்ளார்.

 

சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் 25-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரை இறுதி ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, சீனாவின் சென் யூ பேவுடன் மோதினார். இதில் பி.வி.சிந்து 21-7, 21-14 என்ற நேர் செட்டில் சென் யூ பேவை எளிதில் வென்று தொடர்ந்து 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

இன்று நடந்த இறுதிப் போட்டியில் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள பி.வி. சிந்து, முன்னாள் உலக சாம்பியனும், 4-ம் நிலை வீராங்கனையுமான ஜப்பானின் நஜோமி ஒகுஹராவை சந்தித்தார். இதில் பி.வி.சிந்து 21-7, 21-7 என்ற நேர் செட் கணக்கில் கணக்கில் வென்றார். மொத்தமே 36 நிமிடங்களில் வெற்றி வாகை சூடிய பி.வி.சிந்து உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றார். இதன் மூலம் இந்தப் பட்டத்தை வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் தேடித் தந்து பி.வி.சிந்து சாதனை படைத்தார்.

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் கடந்த 2013 மற்றும் 2014-ல் வெண்கலப்பதக்கம் வென்ற சிந்து, கடந்த 2017 மற்றும் 2018-ல் இறுதிப் போட்டிக்கு முன்னேறினாலும் வெற்றி வசமாகாமல் வெள்ளிப்பதக்கம் மட்டுமே வென்றார். இந்நிலையில் தற்போது தங்கப்பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கம் வென்று சாதனை படைத்த பி.வி.சிந்துவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக பிரதமர் மோடி டிவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், பி.வி.சிந்து இந்தியாவை மீண்டும் பெருமைப்படுத்தியுள்ளார். பி.வி.சிந்துவின் வெற்றி வருங்கால இந்திய இளம் வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமையும். பி.வி.சிந்துவிற்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

More News >>