மே.இ.தீவுகளை துவம்சம் செய்த பும்ரா, இஷாந்த் இந்தியா இமாலய வெற்றி
ஆன்டிகுவாவில் நடைபெற்ற மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 318 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்தது. 2-வது இன்னிங்சில் பும்ராவும், இஷாந்தும் மே.இ.தீவுகளை துவம்சம் செய்ய 100 ரன்களில் அந்த அணி பரிதாபமாக சுருண்டது.
மே.இ.தீவுகளுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி ஆன்டிகுவாவில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் இந்தியா 297 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய மே.இ.தீவுகள் அணி, இஷாந்த் சர்மாவின் (5 விக்) அபார பந்துவீச்சில் 222 ரன்களில் சுருண்டது.
இதனால் 75 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி, 3-ம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட்டுக்கு 185 ரன்கள் எடுத்திருந்தது.ரகானே (53), கோஹ்லி (51) அவுட்டாகாமல் இருந்த நிலையில், நேற்று 4-ம் நாள் ஆட்டம் தொடர்ந்தது.கோஹ்லி ஒரு ரன் கூட சேர்க்காமல் முந்தைய நாள் எடுத்த ரன்னுடன் (51) அவுட்டானார். இதன் பின் வந்த ஹனுமா விஹாரி, ரஹானேவுடன் ஜோடி சேர்ந்து அதிரடி கிளப்பி விரைந்து அரைசதமடித்தார். தொடர்ந்து ரஹானேவும் சதமடித்தார். இந்த சதம் டெஸ்ட் போட்டிகளில் ரஹானே அடிக்கும் 10-வது சதமாகும். இந்த ஜோடி 5 -வது விக்கெட்டுக்கு 132 ரன் சேர்த்திருந்த நிலையில் ரகானே (102) அவுட்டானார். பின்னர் வந்த ரிஷப் பன்ட், அதிரடி காட்டத் தவறி 7 ரன்களில் வெளியேறினார். சதம் விளாசுவார் என எதிர் பார்க்கப்பட்ட விஹாரி 93 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.
விஹாரி அவுட்டான போது 2-வது இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 343 ரன்கள் என்ற நிலையில் இந்தியா டிக்ளேர் செய்தது.
இதனால், 419 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய மே.இ.தீவுகள் அணிக்கு பும்ராவும், இஷாந்தும் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்தனர். பும்ராவின் அபார வேகத்துக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் கிரெய்க் பிராத்வைட் (1), கேம்ப்பெல் (7), பிராவோ (2), ஷாய் ஹோப் (2), கேப்டன் ஹோல்டர் (8) ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் வரிசையாக அவுட்டாகி நடையைக் கட்டினர். மற்றொரு பக்கம் இஷாந்தும் மிரட்ட புரூக்ஸ் (2), ஹெட்மயர் (1) அவுட்டாகினர். இதனால்2-வது இன்னிங்சில் மே.இ.தீவுகள் 50 ரன்களுக்குள் 9 விக்கெட்டுகளை இழந்து பரிதாபமான நிலையில் இருந்தது. கடைசி நேரத்தில் ரோச், கம்மின்ஸ் ஆகியோர் சிக்சர், பவுண்டரிகளாக விளாசி, கூடுதலாக 50 ரன் சேர்க்க மே.இ.தீவுகள் அணி 100 ரன்களை எட்டியது. கடைசியில் ரோச் 5 சிக்சர்கள் விளாசி 38 ரன்கள் சேர்த்த நிலையில், இஷாந்த் வேகத்தில் அவுட்டானார்.
இதனால் 100 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது மே.இ.தீவுகள் அணி .இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்தது. இந்திய அணியில் பும்ரா 5, இஷாந்த் 3, ஷமி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். முதல் இன்னிங்சில் 81, 2-வது இன்னிங்சில் 102 ரன்கள் விளாசிய ரஹானே ஆட்ட நாயகன் விருதை தட்டிச் வென்றார்.
இந்த வெற்றியின் மூலம் தொடரில் 1-0 என இந்தியா முன்னிலை பெற்றது. 318 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி பெற்ற இந்த வெற்றியின் மூலம் அந்நிய மண்ணில் அதிக ரன் வித்தியாசத்தில் பெற்ற வெற்றி என்ற சாதனையை படைத்தது.
ஆன்டிகுவா டெஸ்ட் : கோஹ்லி, ரஹானே அபாரம்; வலுவான நிலையில் இந்தியா