மன்மோகனுக்கு இனிமேல் சிறப்பு பாதுகாப்பு கிடையாது உள்துறை அமைச்சகம் முடிவு

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு சிறப்பு பாதுகாப்பு படையின்(எஸ்.பி.ஜி) பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்படுகிறது. இனிமேல் அவருக்கு மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை பாதுகாப்பு அளிக்கப்படும்.

கடந்த 1991ம் ஆண்டில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, ஸ்ரீபெரும்புதூரில் மனிதவெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். இதையடுத்து, மத்திய அரசு ஒரு சட்டம் இயற்றி, சிறப்பு பாதுகாப்பு படைைய(எஸ்.பி.ஜி) உருவாக்கியது. இந்த பாதுகாப்பு படையில் உள்ள அதிகாரிகள், வீரர்கள் பல்வேறு பயிற்சிகளை பெற்று திறமையாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இவர்களை கறுப்பு பூனைப் படை என்று சொல்வதுண்டு.

முன்னாள் பிரதமர்களுக்கு அவர்கள் பதவியிழந்த பின், 10 ஆண்டுகளுக்கு கறுப்பு பூனை பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் எஸ்.பி.ஜி. சட்டத்தின் கீழ் விதிமுறை வகுக்கப்பட்டது. இதன்படி, வி.பி.சிங், தேவகவுடா ஆகியோருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டது. ஆனால், வாஜ்பாய் ஆட்சிக்கு வந்ததும், எஸ்.பி.ஜி. சட்ட விதியில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. முன்னாள் பிரதமர்களுக்கு பதவியிழந்த ஓராண்டுக்கு மட்டும் எஸ்.பி.ஜி. பாதுகாப்பு அளிப்பது என்றும், அதன்பிறகு அவர்களி்ன் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதா என்பதை ஆய்வு செய்து எஸ்.பி.ஜி. பாதுகாப்பை நீட்டிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, வி.பி.சிங், தேவகவுடா ஆகியோருக்கு வாஜ்பாய் ஆட்சியில் உள்ள போதே எஸ்.பி.ஜி பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது.

தற்போது எஸ்.பி.ஜி. பாதுகாப்பு குறித்த உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அளிக்கப்படும் எஸ்.பி.ஜி. பாதுகாப்பை விலக்கிக் ெகாள்ள முடிவு செய்யப்பட்டிருக்கிறது. ஏற்கனவே மன்மோகன்சிங்கின் மகள்கள் தங்களுக்கு அந்த பாதுகாப்பு தேவையில்லை என்று கூறியதால், அப்போதே விலக்கிக் கொள்ளப்பட்டது. அதேபோல், வாஜ்பாய் வளர்ப்பு மகளுக்கும் அந்த பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. எனினும், வாஜ்பாய் கடந்த ஆண்டு இறக்கும் வரை அவருக்கு எஸ்.பி.ஜி. படை பாதுகாப்பு தரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மன்மோகனுக்கு இனிமேல் மத்திய ரிசர்வ் போலீஸ்(சி.ஆர்.பி.எப்) பாதுகாப்பு அளிக்கப்படும். அதேசமயம், சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், எஸ்.பி.ஜி. பாதுகாப்பு தொடரும் என்று உள்துறை அமைச்சகம் கூறியிருக்கிறது. எஸ்.பி.ஜி. படையில் தற்போது 3ஆயிரம் வீரர்கள் உள்ளனர். ஜனாதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு இவர்கள் பாதுகாப்பு அளி்த்து வருகின்றனர்.

காஷ்மீர் அவலம் எத்தனை நாள் தொடரும்? வீடியோவை பதிவிட்டு பிரியங்கா காட்டமான கேள்வி

More News >>