பாஜக தலைவர்களின் அடுத்தடுத்த மரணம்: சூனியம் தான் காரணமாம் பெண் எம்.பி. பகீர் தகவல்
அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ் போன்ற மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து உயிரிழக்க காரணம், பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சூனியம் வைத்துள்ளது தானாம். இதனைக் கூறியிருப்பவர் யார் தெரியுமா? சர்ச்சைகளுக்கு பெயர் போன சாட்சாத் பாஜக பெண் எம்.பி சாத்வி பிரக்யா தாக்கூறே தான். அவரின் பகீர் குற்றச்சாட்டு இப்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் போபால் தொகுதி எம்.பி. சாத்வி பிரக்யா சிங் தாக்கூர்.பெண் சாமியாரான இவர் அடிக்கடி சர்ச்சை கருத்துகளை கூறி, பல்வேறு தரப்பினரின் கண்டனங்களுக்கு ஆளாவதும், பின்னர் மன்னிப்பு கேட்பதும் வழக்கமாகக் கொண்டவர். கடந்த மக்களவைப் பொதுத், தேர்தலின் போது, மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவை தேச பக்தர் என்று கூறி, சொந்தக் கட்சியான பாஜகவுக்கே தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. இதனால் பாஜக கண்டித்ததுடன் அவருக்கு வாய்ப்பூட்டு போட்டது கூட நடந்தது.
இந்நிலையில், கடந்த ஒரு வருடத்தில் மட்டும் பாஜகவின் முக்கியத் தலைவர்களாக திகழ்ந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மனோகர் பாரிக்கர், அனந்தகுமார், சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி போன்ற பலர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. இவர்களின் உயிரிழப்புகளுக்கு எல்லாம் புதிய காரணம் ஒன்றை கூறியுள்ளார் பிரக்யா சிங் . போபாலில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிரக்யா, மக்களவை தேர்தல் சமயத்தில் மகாராஜ் ஜி என்னிடம் வந்து, இது மிகவும் மோசமான நேரம். பாஜகவுக்கும், கட்சியின் தலைவர்களுக்கு எதிராகவும் எதிர்க்கட்சிகள் தீய சக்திகளை பயன்படுத்துகின்றன. இந்தச் சூழலில் நீங்கள் கவனமாக இருங்கள் என என்னிடம் கூறினார். நான் அதனை அப்போது பெரிதுபடுத்தாமல் மறந்து விட்டேன்.
ஆனால் இப்போது நடப்பதை பார்க்கும் போது மகாராஜ் கூறியது உண்மை என்றே தோன்றுகிறது. கட்சி தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக மரணமடைந்து வருகின்றனர். மகாராஜ் ஜி சொன்னதை இப்போது நினைத்து பார்க்கிறேன். நீங்கள் நம்புவீர்களா? இல்லையா? என எனக்கு தெரியவில்லை. எனக்கு என்னமோ இது உண்மை என்றே தோன்றுகிறது என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
பிரக்யாவின் இந்தக் கருத்துக்கு பாஜக தரப்பில் யாரும் எந்த ரியாக்சன் காட்டவில்லை. ஏனெனில் அவர் இது போல் அடிக்கடி சர்ச்சையாக பேசி சிக்கலில் சிக்கிக் கொள்வதும், பரபரப்பை ஏற்படுத்துவதும் புதிதல்ல என்பதால் பாஜகவினர் இதனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ பிரக்யாவின் இந்தக் கருத்து குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளது.
காஷ்மீர் அவலம் எத்தனை நாள் தொடரும்? வீடியோவை பதிவிட்டு பிரியங்கா காட்டமான கேள்வி