மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் மின் விநியோகத்தில் தடை ஏற்படுமா ? அமைச்சர் விளக்கம்
சென்னை: ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் மின்சார வாரிய ஊழியர்கள் தொடரும் வேலை நிறுத்தம் போராட்டத்தினால் மின் விநியோகம் தடைப்படுமா என்ற கேள்விக்கு தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறியதாவது: மின்வாரிய ஊழியர் சங்கங்களை அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் அதனை சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் புறக்கணித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது.
அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதே வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபடுவதற்கான காரணம். மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக போராட்டத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைக்க வேண்டும். இதை எதிர்த்து திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் போராட்டம் நடந்தாலும் அதனை எதிர்கொள்ளவும் தயாராக இருக்கிறோம்.
வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுப்படும் ஊழியர்களுக்கு சம்பளம் பிடிக்கப்படும். மேலும், மின் தடையை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைய வேண்டாம்.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.