ராகுலின் பொய் தகவல்கள் பாகிஸ்தானுக்கு தான் உதவும் காஷ்மீர் ஆளுநர் சரமாரி குற்றச்சாட்டு

காஷ்மீர் விவகாரத்தில் ராகுல் காந்தி தரம் தாழ்ந்த அரசியல் செய்வதாகவும், ராகுல் கூறும் பொய்த் தகவல்களை இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்திற்கு பாகிஸ்தான் பயன்படுத்தும் அபாயம் உள்ளது என காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் குற்றம் சுமத்தியுள்ளார்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து நடவடிக்கைக்கு பின், அம்மாநிலத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் செல்ல எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால் அங்கு என்ன நடக்கிறது என்பதே வெளியுலகுக்கு தெரியவில்லை என்று ராகுல் காந்தி குற்றம் சுமத்தியிருந்தார்.

இதைத் தொடர்ந்து அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக்குக்கும், ராகுல் காந்திக்கும் இடையே மாறி, மாறி அறிக்கைப் போர் நடைபெற்றது. கடைசியில், காஷ்மீருக்கு வந்து தாராளமாக பார்க்கலாம் என்று ராகுலுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். ஆனால் ராகுல் காந்தியோ, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 12 பேர் குழுவுடன் நாட்களுக்கு முன் காஷ்மீருக்கு பயணமானார்.

ஆனால், ஸ்ரீநகரில் திடீரென தடையுத்தரவை போட்டு, விமான நிலையத்தில் ராணுவ வீரர்களையும் வைத்தது காஷ்மீர் அரசு. அங்கு சென்ற ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி குழுவுக்கு அனுமதி மறுத்து திருப்பி அனுப்பப்பட்டனர்.டெல்லி திரும்பிய ராகுல் காந்தி, காஷ்மீர் தொடர்பாக மத்திய அரசு மீதும், அம்மாநில அரசு மீதும் சரமாரி குற்றச்சாட்டுகளை வைத்தார். மேலும் தன்னுடன் விமானத்தில் பயணித்த காஷ்மீரைச் சேர்ந்த பெண்ணிடம் கலந்துரையாடிய வீடியோவையும் சமூக வலைதளத்தில் பரவச் செய்தார். அந்தப் பெண், காஷ்மீரில் தாங்கள் படும் வேதனைகளை கதறியழுதபடி கூறும் இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பான து.

இந்நிலையில் ராகுல் காந்தியின் இந்தச் செயல்களை குறை கூறி காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் பரபரப்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், காஷ்மீர் குறித்து ராகுல் காந்தி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். இதனை அவர் உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே அவரை காஷ்மீருக்கு வரும்படி அழைத்தேன். ஆனால் எனது அழைப்பை வைத்து அவர் அரசியல் செய்கிறார்.

காஷ்மீருக்கு எதிர்கட்சி தலைவர்களுடன் வந்து, கைது செய்யப்பட்டுள்ள தலைவர்களை சந்திக்க உள்ளதாகவும், செய்தி,ஊடகங்களில் உரையாட உள்ளதாகவும் அவர் தெரிவித்து விட்டு காஷ்மீர் வந்தார். காஷ்மீர் விவகாரத்தை வைத்து அரசியல் செய்ய முயல்கிறார் என்பதை புரிந்து கொண்டதால் அவருக்கு விடுத்த அழைப்பை வாபஸ் பெற்றேன். இதனால் அனுமதி மறுத்து ராகுலும் மற்ற தலைவர்களும் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இதனால் டெல்லி திரும்பிய ராகுல் காந்தி, காஷ்மீர் தொடர்பாக அடிப்படை , ஆதாரமற்ற பொய்த் தகவல்களை தெரிவித்துள்ளார். ராகுல்காந்தி கூறும் இது மாதிரியான பொய்க் கருத்துக்களை இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பயன்படுத்தக்கூடும். எனவே முக்கிய விவகாரங்களில் நாட்டு நலனை முக்கியமாக பார்க்க வேண்டும். அரசியல் லாபத்துக்காக தரம் தாழ்ந்த அரசியல் செய்வதை ராகுல் காந்தி நிறுத்திக் கொள்ள வேண்டும் என காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சர்தார் படேல் கனவை நிறைவேற்றியுள்ளோம்; அமித்ஷா பேச்சு

More News >>