மருத்துவர்கள் ஸ்டிரைக் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் பாதிப்பு

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் இன்று ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பல அரசு மருத்துவமனைகளில், நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரசு மருத்துவர்களுக்கு தகுதிக்கேற்ற ஊதியம், பட்ட மேற்படிப்பில் 50 சதவீத ஒதுக்கீடு, முதுகலை டாக்டர்களுக்கு கலந்தாய்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று அடையாள வேலை நிறுத்தம் மேற்கொள்ள அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்திருந்தது. இதனால், சென்னை, திருச்சி, கடலூர் உள்ளிட்ட நகரங்களில் உள்ள அரசு பொது மருத்துவமனைகளில் பெரும்பாலான மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, புறநகர்களில் இருந்து வந்த நோயாளிகள், தர்ணாவில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் பணிக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பேட்டியில், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுடன் பேசுவதற்கு தயாராக உள்ளதாகவும், அவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘ஏழை எளிய மக்களின் மருத்துவ தேவையை பாதிக்கும் என்பதால், அரசு மருத்துவர்களும், அரசும் அமர்ந்து பேசி உடனே தீர்வு காண வேண்டும். மருத்துவர்களின் கோரிக்கைகள் நியாயமானதாக இருந்தாலும், அரசு மருத்துவமனைகளையே நம்பியிருக்கும் ஏழை நோயாளிகள் சிகிச்சை எந்த விதத்திலும் பாதிக்கக் கூடாது. வேலை நிறுத்தம் தவிர்க்கப்பட வேண்டும்’’ என்று கூறியிருக்கிறார்.

ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் 30-ந் தேதி வரை நீட்டிப்பு

More News >>