அருண் ஜெட்லி குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி நேரில் ஆறுதல்

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் கூறினார்.

உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அருண் ஜெட்லி, கடந்த சனிக்கிழமை காலமானார். அந்தச் சமயம் பிரதமர் மோடி, வெளிநாட்டு பயணத்தில் இருந்ததால், நேரில் அஞ்சலி செலுத்தவில்லை. தனது நீண்ட கால நண்பரை இழந்து விட்டதாக டுவிட்டரில் அருண் ஜெட்லி மரணம் காரணமாக இரங்கல் தெரிவித்த மோடி, அருண் ஜெட்லியின் குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டும் ஆறுதல் கூறியிருந்தார். அப்போது தாம் வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்து விட்டு நாடு திரும்புவதாகவும் ஜெட்லியின் குடும்பத்தினரிடம் பிரதமர் மோடி கூறினார்.

ஆனால் பயணத்தை ரத்து செய்ய வேண்டாம் என்று ஜெட்லி குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்தனர். இதனால் பிரான்ஸ் நாட்டில் நடந்த ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, இன்று டெல்லி திரும்பினார்.

டெல்லி திரும்பிய மோடி, அடுத்த சில நிமிடங்களில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அருண் ஜெட்லியின் இல்லத்துக்கு நேரில் சென்றார். அருண் ஜெட்லியின் மனைவி, மகன், மகள் ஆகியோரை சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் கூறினார்.

வாஜ்பாய் முதல் ஜெட்லி வரை... ஒரே வருடத்தில் முக்கிய தலைவர்கள் பலரை இழந்த பாஜக

More News >>