சூட்கேஸ் திருடும் இந்திய தொழிலதிபர் அமெரிக்காவில் கைது

அமெரிக்காவில் விமான நிலையத்தில் சூட்கேஸ்களை திருடிய பெரும் கோடீஸ்வர தொழிலதிபர் தினேஷ் சாவ்லா கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் தினேஷ் சாவ்லா. அவர் அமெரிக்காவில் மிஸிசிப்பி பகுதியில் சாவ்லா குரூப் ஓட்டல்களை நடத்தி வருகிறார். முன்பு இவர், அமெரிக்க அதிபர் டிரம்ப் குடும்பத்தினருடன் பார்ட்னராக சேர்ந்து ஓட்டல்களை நடத்தி வந்திருக்கிறார். பெரும் கோடீஸ்வரரான சாவ்லா, கடந்த 18ம் தேதியன்று மெம்பிஸ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வேறு ஊருக்கு பயணம் செய்தார்.

அதற்கு முன்பாக, விமான நிலையத்தில் லக்கேஜ் கவுன்டரில் இருந்து வேறொரு நபரின் சூட்கேசை தூக்கிக் கொண்டு வேக,வேகமாகச் சென்று பார்க்கிங்கில் நிறுத்தியிருந்த காருக்குள் போட்டு விட்டு வந்தார். பின்னர், விமானத்தில் ஏறி பறந்து விட்டார்.

இந்நிலையில், சூட்கேசை இழந்த நபர், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து, லக்கேஜ் கவுன்டரில் இருந்த சூட்கேசை யார் எடுத்தது என்று சி.சி.டி.வி. கேமராக்களை ஆராய்ந்து பார்த்தனர். அப்போது சாவ்லாவின் திருட்டு தெரிய வந்தது. அவரது காரை பரிசோதித்த போது, அதில் இந்த சூட்கேசுடன் இன்னொரு சூட்கேசும் இருந்தது. அது ஒரு மாதத்திற்கு முன்பு திருடியதாம். இதன்பிறகு, சாவ்லா கடந்த 26ம் தேதி வெளியூரில் இருந்து மெம்பிஸ் விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தார். அவரை போலீஸார் கைது செய்தனர். அவர் திருடிய சூட்கேஸ்களில் இருந்த பொருட்களின் மதிப்பு சுமார் 4 ஆயிரம் டாலர் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

சாவ்லா கைதான செய்தி வெளியானதும் அவரது ஓட்டல்களில் பணியாற்றும் பலரும் அதிர்ச்சியடைந்தனர். ஒரு மிகப்பெரிய பணக்காரர் எதற்காக இப்படி அல்பமாக திருடினார் என்று எல்லோருக்கும் சந்தேகம் ஏற்பட்டது. அமெரிக்க போலீஸாரும் நம்மூரு போலீஸாரைப் போல் வேண்டுமென்றே அவரை திருட்டு வழக்கில் கைது செய்துள்ளார்களோ என்ற பேச்சும் எழுந்தது.

ஆனால், தினேஷ் சாவ்லா தான் திருடியதை ஒப்புக் கொண்டார். அவர் போலீஸாரிடம் கூறுகையில், ‘‘யாருக்கும் தெரியாமல் பொருட்களை திருடிச் செல்வதில் ஒரு த்ரில் இருக்கும். அந்த அனுபவத்திற்காக மட்டுமே அப்படி செய்தேன். திருடுவது தவறு என்று தெரிந்தும் நீண்ட நாட்களாக இதை செய்து வந்தேன்’’ என்று கூறியுள்ளார். சாவ்லா கைதான செய்தி, அமெரிக்காவில் உள்ள தொழிலதிபர்கள் மட்டுமின்றி உலக அளவில் பரபரப்பான செய்தியாகி விட்டது.

More News >>