டெல்லி கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு அருண் ஜெட்லி பெயர்
டெல்லியில் உள்ள பெரோஷா கோட்லா கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் பெயர் சூட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த அருண் ஜெட்லி, அரசியலில் மட்டுமின்றி கிரிக்கெட்டிலும் மிகவும் ஆர்வம் கொண்டவர். அது மட்டுமின்றி 1999 முதல் 2013 வரை டெல்லி மாநில கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்தார். அவரது காலத்தில் தான் டெல்லி, அணியைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் பலருக்கும் ஊக்கம் கொடுத்தார். இதனால் வீரேந்திர சேவாக், கவுதம் காம்பீர், ஆஷிஷ் நெஹ்ரா, தற்போதைய கேப்டன் கோஹ்லி மற்றும் ரிஷப் பண்ட் போன்றோர் இந்திய அணியில் இடம் பெற காரணமாகவும் இருந்தார்.
அதே போன்று டெல்லியில் சர்வதேச கிரிக்கெட் மைதானமான புகழ் பெற்ற பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தை தரமாக சீரமைத்ததிலும் ஜெட்லியின் பங்கு உண்டு.இதனால் அவரது நினைவாக பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தின் ஸ்டேடியத்திற்கு அருண் ஜெட்லியின் பெயர் சூட்டப்படும் என டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ரஜத் சர்மா தெரிவித்துள்ளார்.
வரும் செப்டம்பர் 12-ந் தேதி இதற்கான பெயர் சூட்டும் விழா நடைபெறும் என்றும், அன்றைய தினம் ஸ்டேடியத்தில் உள்ள ஒரு கேலரிக்கு இந்திய அணி கேப்டன் கோஹ்லியின் பெயர் சூட்டும் விழா நடைபெறும் என ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளது. அந்த விழாவில் ஸ்டேடியத்திற்கு அருண் ஜெட்லி பெயர் சூட்டப்படும் எனவும், மைதானத்தின் பெயர் பெரோஷ் ஷா கோட்லா என்றே அழைக்கப்படும் என்றும் ரஜத் சர்மா தெரிவித்துள்ளார்.