காஷ்மீர் விவகாரம் : மத்திய அரசுக்கு எதிரான 10 மனுக்கள் உச்ச நீதிமன்றம் விசாரணை
ஜம்மு-காஷ்மீரில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு நடவடிக்கைகள், கட்டுப்பாடுகளுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள 10 வழக்குகளை உச்ச நீதிமன்றம் இன்று ஒரே நாளில் விசாரிக்கிறது.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப் பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது கடந்த 5-ந் தேதி ரத்து செய்தது. இதனால் அம்மாநிலத்தில் எதிர்ப்புகள் எழும், போராட்டங்கள் நடைபெறலாம் என்பதை கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர். தகவல் தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டு, ஊடகங்கள் செய்தி சேகரிப்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதனால், இந்த கட்டுப்பாடுகளையும், நடவடிக்கைகளையும் நீக்குமாறு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில், பொது நல மனுக்கள் உள்பட பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தேசிய மாநாட்டுக் கட்சியின் எம்பி முகமது அக்பர் லோன், ஓய்வு பெற்ற நீதிபதி ஹஸ்னைன் மசூதி,வழக்கறிஞர் எம்.எல்.சர்மா உள்ளிட்ட பலர் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
இதேபோல் ஜம்மு-காஷ்மீரில் காவலில் வைக்கப்பட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முகமது தாரிகமியை நேரில் ஆஜர்படுத்தக் கோரி அக்கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியும் மனு தாக்கல் செய்துள்ளார்.
இதனால் ஜம்மு-காஷ்மீர் தொடர்புடைய 10 மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என பட்டியலிடப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இந்த மனுக்களை விசாரிக்க உள்ளது. ஒரே நாளில் காஷ்மீர் தொடர்புடைய அனைத்து வழக்குகளும் விசாரிக்கப்பட உள்ளதால், அதில் உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க உள்ள உத்தரவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏதேனும் ஒரு ஆதாரத்தை காட்ட முடியுமா? - மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் குடும்பம் சவால்