கர்நாடகாவில் எடியூரப்பாவுக்கும் தலைவலி ஆரம்பம் மூத்த அமைச்சர்கள் பலர் போர்க்கொடி
கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பாவுக்கும் தலைவலி ஆரம்பமாகிவிட்டது.துணை முதல்வர் பதவி ஒதுக்கீட்டிலும், இலாகா ஒதுக்கீட்டிலும் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டதாக பாஜக மூத்த அமைச்சர்கள் பலர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அவர்களின் ஆதரவாளர்களோ போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளதால் எடியூரப்பாவுக்கு ஆரம்பமே சிக்கலாகியுள்ளது.
கர்நாடகத்தில், பதவி, அதிகாரத்துக்காக கட்சி வேறுபாடின்றி அம்மாநில அரசியல்வாதிகள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பது கடந்த பல ஆண்டுகளாகவே நிரூபணமாகி வருகிறது. குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அரசு கடந்த மாதம் கவிழ்ந்தது. இதற்கு காரணமும் அமைச்சர் பதவி கிடைக்காத அதிருப்தியில் எம்எல்ஏக்கள் பலர் ராஜினாமா செய்தது தான். இவர்களுக்கு அமைச்சர் பதவி தருவதாக பாஜக தரப்பு ஆசை வார்த்தை கூறி, குமாரசாமி அரசை கவிழச் செய்துவிட்டது.
இதைத் தொடர்ந்து, பாஜக ஆட்சியமைத்து, எடியூரப்பா கடந்த மாதம் 26-ந் தேதி முதல் வராக பதவியேற்றார். எடியூரப்பா மட்டுமே பதவியேற்ற நிலையில், அமைச்சரவை பட்டியல் தயாரிப்பு இழுபறியாகிக் கொண்டே வந்தது. இதற்குக் காரணமும் அமைச்சர் பதவிக்காக பாஜக எம்எல்ஏக்களில் பலர் முட்டிமோதியது தான். இதனால் 25 நாட்களாக நீண்ட இழுபறிக்குப் பின் 17 அமைச்சர்கள் கடந்த 20-ந் தேதி பதவியேற்றனர். இதிலேயே, அமைச்சர் பதவி கிடைக்காத பலர் அதிருப்தி அடைந்த நிலையில், அமைச்சர் பதவி கிடைத்தவர்களோ முக்கிய இலாகாக்களை ஒதுக்க வேண்டும் என நெருக்கடி தர ஆரம்பித்தனர். இதனால் இலாகா ஒதுக்கீடும் ஒரு வாரம் தாமதமாகி, நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியானது. இதில் யாரும் எதிர்பாராத வகையில் 3 துணை முதல்வர்கள் நியமிக்கப்பட்டனர்.
கோவிந்த் கார்ஜோள், லட்சுமண் சவதி, அஸ்வத் நாராயண் ஆகியோருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டு அவர்களுக்கு முக்கியமான துறையும் ஒதுக்கப்பட்டது. இதைக் கண்ட மூத்த அமைச்சர்களான ஜெகதீஷ் ஷெட்டர்,ஆர்.அசோக், சி.டி.ரவி, ஈசுவரப்பா, ஸ்ரீராமுலு உள்ளிட்டோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதில் ஜெகதீஷ் ஷெட்டர் ஏற்கனவே முதல்வர் பதவி வகித்தவர். எனவே அவர் வெளிப்படையாகவே தனது அதிருப்தியை காட்டினார். மேலும் முந்தைய பாஜக அரசில் துணை முதல்வர் பதவி வகித்த ஆர்.அசோக், ஈசுவரப்பா ஆகியோரும் தங்களுக்கு மீண்டும் துணை முதல்வர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்து விட்டனர். இதனால் முக்கிய அமைச்சர்கள் பலர் தங்களுக்கு து.முதல்வர் பதவி ஒதுக்காததால் அதிருப்தி அடைந்து போர்க்கொடி தூக்கத் தொடங்கி விட்டனர்.
இதில் குமாரசாமி அரசு கவிழ முக்கிய காரணமாக இருந்த ஆர்.அசோக்கோ தனது அதிருப்தி குறித்து யாரிடமும் பேசாமல் வீட்டை விட்டே வெளியேறாமல் மவுனம் சாதித்தார். இதனால் முதல்வர் எடியூரப்பா, நேரில் சென்று அசோக்கை சமாதானப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
மேலும்,பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான அமைச்சர் சி.டி.ரவியோ, தனக்கு முக்கியத்துவம் இல்லாத சுற்றுலா துறையை ஒதுக்கியதற்கு கடும் அதிருப்தியை வெளிப்படையாகவே தெரிவித்து ராஜினாமா செய்யப் போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் தனக்கு வழங்கப்பட்ட அரசு காரையும் திருப்பி அனுப்பி ரவி எதிர்ப்பு காட்ட, அவரை பாஜக மேலிடம் படாதபாடு பட்டு சமாளித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக்கப்பட்டுள்ள பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான ஸ்ரீராமுலுவுக்கு துணை முதல்வர் பதவி வழங்கக்கோரி அவரது ஆதரவாளர்கள் போராட் பத்தில் குதித்தனர். நேற்று பெல்லாரியில் போராட்டம் நடத்திய ஸ்ரீராமுலு ஆதரவாளர்கள் நடுரோட்டில் டயர்களை போட்டு எரித்து போராட்டம் நடத்தினர்.அப்போது பாஜக தலைவர் அமித்ஷாவின் உருவப் படத்தையும் அவர்கள் தீயிட்டு கொளுத்திய சம்பவமும் அரங்கேறியது.
இப்படி துணை முதல்வர் பதவி ஒதுக்கீடு மற்றும் அமைச்சரவை இலாகா ஒதுக்கீட்டிலும், பாஜக மூத்த தலைவர்கள் பலர் அதிருப்தியில் உள்ளதும், வெளிப்படையாகவே போர்க்கொடி தூக்கியுள்ளதும் எடியூரப்பாவுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் உடைகிறது காங்கிரஸ்-ம.ஜ.த. கூட்டணி; எடியூரப்பா மகிழ்ச்சி