காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப் பிரிவை மத்திய அரசு கடந்த 5-ந் தேதி ரத்து செய்தது. இதனால் அம்மாநிலத்தில் எதிர்ப்புகள் எழும், காஷ்மீரில்  போராட்டங்கள் நடைபெறலாம் என்பதை கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர். தகவல் தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது, ஊடகங்கள் செய்தி சேகரிப்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதனால், 370-வது பிரிவை ரத்து செய்ததை எதிர்த்தும், அங்கு அமலில் உள்ள கட்டுப்பாடுகளையும், நடவடிக்கைகளையும் நீக்குமாறு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில், பொது நல மனுக்கள் உள்பட பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட ன.

இந்த வழக்குகளில் பெரும்பாலானவை இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, 370-வது சட்டப் பிரிவை நீக்கியது தொடர்பாக விளக்கம் கேட்டு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கு தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படுவதாகவும், வரும் அக்டோபர் முதல் வாரம் முதல் விசாரணை நடைபெறும் எனவும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

காஷ்மீர் பற்றி அவதூறாக வீடியோ ; பாக்., அதிபருக்கு டுவிட்டர் நிறுவனம் நோட்டீஸ்

More News >>