தமிழகத்திற்கு 14.75 டி.எம்.சி. குறைத்து வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழகத்திற்கு 192 டி.எம்.சி நீரை வழங்க வேண்டும் என்ற நடுவர் நீதிமன்ற உத்தரவை மாற்றி, தற்போது 177.25 டிஎம்.சி. நீர் அளவாக வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து, தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட 4 மாநில அரசுகள் வழக்கு தொடர்ந்தன. இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதி அமிதவராய் பிப்ரவரி 23-ஆம் தேதி ஓய்வு பெறவுள்ளதால் அதற்கு முன்னதாக தீர்ப்பை வெளியிட உச்சநீதிமன்றம் முடிவு செய்ததன் அடிப்படையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

கடைசியாக, கடந்த 2017 செப்டம்பர் 20-ஆம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கால தாமதம் செய்வது தவறான அணுகுமுறை என்று மத்திய அரசைக் கண்டித்ததுடன், 2013-ஆம் ஆண்டே அரசாணை பிறப்பித்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு தாமதம் செய்வது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினர்.

அன்றோடு அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இதன் பின்னர் எழுத்துப்பூர்வமான வாதங்களை மட்டும் வைப்பதற்கு அனுமதி வழங்கிய நீதிபதிகள், காவிரி வழக்கில் மாநில அரசுகள் சார்பில் தத்தமது தொழில்நுட்ப வல்லுநர்கள் கருத்தை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

இந்நிலையில், 150 நாட்களுக்குப் பிறகு, காவிரி வழக்கில் இன்று இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்தது. அதன்படி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா காவிரி நீதிமன்ற தீர்ப்பை வாசித்தார்.

அதில், காவிரி நதிநீரை உரிமை கொண்டாட யாருக்கும் உரிமை முடியாது என்றார். மேலும், தமிழகத்திற்கு 192 டி.எம்.சி நீரை வழங்க வேண்டும் என்ற நடுவர் நீதிமன்ற உத்தரவை மாற்றி, தற்போது 177.25 டிஎம்.சி. நீர் அளவாக வழங்க உத்தரவிட்டுள்ளது. இதனால், 14.75 டி.எம்.சி. நீர் குறைவாக கிடைக்கும்.

தவிர, காவிரி தொடர்பான அனைத்து வழக்குகளும் முடித்து வைப்பதாக கூறிய நீதிபதி, இனி மேல்முறையீடு செய்ய முடியாது எனவும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. காவிரி வழக்கு தொடர்பான இந்த தீர்ப்பு இனிவரும் 15 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News >>