விபத்தில் காயம்பட்டோருக்கு உடனடி உதவி செய்தால் ரூ 5000 பரிசு புதுச்சேரி அரசு அறிவிப்பு

விபத்துகளில் சிக்கி காயம்பட்டோரை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க உதவி செய்வோருக்கு ரூ.5 ஆயிரம் சன்மானமாக வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

நாட்டில் சாலை வசதி அதிகரித்து, வாகனப் போக்குவரத்தும் பன்மடங்கு பெருகி விட்டது. அதற்கேற்றாற்போல் சாலை விபத்துகளும் அதிகரிக்கவே செய்து விட்டது. சாலை விபத்துகளில் சிக்கி காயம்படுவோர் உடனடி மருத்துவ உதவி கிடைக்காமல் மரணத்தை தழுவும் அவலமும் நிகழ்கிறது. விபத்தில் எப்படிப் பட்ட காயம் பட்டாலும் கோல்டன் அவர் எனப்படும் அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் சிகிச்சை கிடைத்து விட்டால் காப்பாற்றி விடலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஆனால் சாலையில் அடிபட்டுக் கிடப்போரை காப்பாற்ற சிலருக்கு மனம் இருந்தாலும், அதைத் தொடர்ந்து வழக்கு, சாட்சி விசாரணை என்ற வம்பு, தும்புகளை சிலர் கண்டும் காணாமலே போய் விடுவது வாடிக்கையாக உள்ளது. இதனாலேயே பலர் உயிர் பிழைக்க வாய்ப்பிருந்தும் உடனடி உதவி கிடைக்காமல் மாண்டு போவது சகஜமாக உள்ளது.

இதனால் விபத்துகளில் அடிபட்டுக் கிடப்போரை காப்பாற்ற, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஊக்கப்படுத்தவும் புதுச்சேரி அரசு, பரிசு வழங்கும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

இன்று புதுச்சேரி பட்டப் பேரவையில் முதல்வர் நாராயணசாமி பட்ஜெட் தாக்கல் செய்த போது இந்த திட்டத்தை அறிவித்துள்ளார். அதன்படி புதுச்சேரி மாநில எல்லையில் விபத்தில் சிக்கியவர்களை உடனே மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு ரூ.5 ஆயிரம் சன்மானமாக வழங்கப்படும் என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்தார். மேலும் மீனவர்களுக்கான மீன்பிடி தடைக்கால நிவாரணம் மற்றும் மழைக்கால நிவாரண உதவித் தொகையையும் அதிகரித்து பட்ஜெட்டில் முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

வாஜ்பாய் வசித்த பங்களாவில் குடியேறினார் அமித்ஷா

More News >>