அடப்பாவமே... சொந்தக் கட்சி அமைச்சருக்கே சூன்யமா ? பியூஸ் மனுஷ்க்கும், பியூஸ் கோயலுக்கும் வித்தியாசம் தெரியலையா?

சேலத்தில் சமூக செயற்பாட்டாளர் பியூஸ் மனுஷ் மீது பாஜகவினர் நேற்று தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலை கொண்டாடும் விதமாக, பியூஸ் மனுஷ் என்பதற்குப் பதிலாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பெயரைப் போட்டு பியூஸ் கோயலை துவைத்து எடுத்து விட்டார்கள் நம் இந்து அபிமானிகள்.. மிக்க சந்தோஷம்... என்று டுவிட்டரில் பதிவிட்டு சொந்தக் கட்சி அமைச்சருக்கே சூன்யம் வைத்துள்ளார் பாஜக அபிமானி ஒருவர். இந்தப் பதிவை பதி விட்ட அந்தப் புள்ளியை கேலியும், கிண்டலுமாக பாடாய்ப் படுத்தி வருகிறார்கள் நெட்டி சன்கள்.

சேலத்தைச் சேர்ந்தவர் சமூக செயற்பாட்டாளர் பியூஷ் மனுஷ். ஏரி, குளம் தூர்வாருவது, ஆக்கிரமிப்பு விவகாரத்தை தட்டிக் கேட்பது, பொதுமக்களுடன் பல்வேறு நூதன போராட்டங்களை நடத்துவது என சேலத்தில் பிரபலமானவராகி விட்டவர் பியூஷ் மனுஷ்.

பொருளாதார மந்தநிலை, காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ப பல பிரச்னைகள் குறித்து பாஜகவினரிடம் விளக்கம் கேட்கப் போகிறேன் என நேற்று மாலை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார். அத்துடன் நேரலையில் வீடியோவை பதிவிட்டவாறே சேலம் மாவட்ட பாஜக அலுவலகம் சென்றார். தனது மொபைலில் வீடியோ எடுத்தவாறே பாஜக அலுவலகத்தில் இருந்த நிர்வாகிகளிடம் சரமாரியாக கேள்விகளைக் கேட்டு, பியூஷ் மனுஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.நித்யானந்தா விவகாரம், சபரிமலை விவகாரம், எட்டு வழிச்சாலைத் திட்டம், அதற்காக மரங்களை வெட்டுதல் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளைக் கேட்டதால் ஒரு கட்டத்தில் பாஜகவினர் ஆத்திரமடைந்தனர்.

பாஜகவினர் ஒட்டு மொத்தமாகச் சேர்ந்து பியூஸ் மனுஷ் மீது தாக்குதல் கொடுத்துள்ளனர். கன்னத்தில் ஓங்கி விழுந்த அறையால், பியூஷ் மனுஷ் நிலை குலைந்து போக, போலீசார் வந்து தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனாலும் பியூஸ் மனுஷ் மீது பாஜகவினர் தொடர்ந்து தாக்குதல் நடத்த, போலீசார் அவரை அங்கிருந்து பத்திரமாக அழைத்துச் சென்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக பியூஸ் மனுஷ் மீது பாஜகவினர் புகாரளிக்க, பாஜகவினர் மீது பியூஸ் மனுஷும் புகார் மனு கொடுக்க சேலத்தில் ஒரே பரபரப்பாகி விட்டது.

அத்துடன் பியூஷ் மனுஷ் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்திய காட்சிகளுடன் கூடிய வீடியோவும் சமூக வலைதளங்களில் வைர லாகி பரவி பெரும் விமர்சனங்களும், கண்டனங்களும் எழுந்துள்ளது. பாஜகவினரின் செயலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பியூஷ் மனுஷ் மீது பாஜகவினர் நடத்திய இந்தத் தாக்குதலை கொண்டாடுவதாகக் கருதி எஸ்.வி.பாண்டியன் சண்முகம் என்ற அக் கட்சி அனுதாபி ஒருவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது கேலியும் கிண்டலுக்கும் ஆளாகியுள்ளது. அப்பதிவில், பியூஷ் மனுஷ் என்பதற்குப் பதிலாக பாஜகவின் மூத்த மத்திய அமைச்சரான பியூஷ் கோயல் பெயரைக் குறிப்பிட்டு, பியூஷ் கோயலை துவைத்து எடுத்து விட்டார்கள் நம் இந்து அபிமானிகள்.. சந்தோவும் என்று பதிவிட்டுள்ளார். சொந்தக் கட்சியின் மத்திய அமைச்சர் பெயரைப் போட்டு, துவைத்து எடுத்து விட்டார்கள் என்று போட்டுள்ள இந்தப் பதிவைக் கண்டு பாஜகவினரே அதிர்ந்து போய், பெயரை மாத்துமய்யா என்று அவருக்கு அட்வைஸ் செய்ய, மற்ற நெட்டிசன்களோ கேலியும், கிண்டலுமாக கலாய்த்து வருகின்றனர்.

More News >>