காஷ்மீரில் மீண்டும் மொபைல் போன் சேவை சீத்தாராம் யெச்சூரியும் ஸ்ரீநகர் பயணம்
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 25 நாட்களாக முடக்கப்பட்டிருந்த மொபைல் போன் சேவை முதற்கட்டமாக 5 மாவட்டங்களில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியும் இன்று ஸ்ரீநகர் பயணமாகியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை ரத்து செய்த மத்திய அரசு, அந்த மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்றும் அறிவித்தது.
மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கைகளால் அந்த மாநிலத்தில் பதற்றமான சூழல் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் கடந்த 5-ந் தேதி முதல் மாநிலம் முழுவதும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதுடன், அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர். செல்போன், இணையதள சேவைகளும் முடக்கப்பட்டன.
இந்நிலையில், 25 நாட்களுக்குப் பின் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் தோடா, கிஸ்துவார், ரம்பான்,ராஜோரி மற்றும் பூஞ்ச் ஆகிய 5 மாவட்டங்களில் மீண்டும் செல்போன் சேவை தொடங்கியுள்ளது. படிப்படியாக மற்ற பகுதிகளுக்கும் இந்தச் சேவை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே காஷ்மீர் மாநிலத்தில் சிறை வைக்கப்பட்டுள்ள மார்க்சிஸ்ட் கட்சி மூத்த தலைவர் முகமது தாரி காமியை சந்திக்க அக்கட்சியின் பொதுக் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி இன்று காலை ஸ்ரீநகர் பயணமானார். காஷ்மீர் செல்ல யெச்சூரிக்கு உச்ச நீதிமன்றம் நேற்று நிபந்தனையுடன் அனுமதி அளித்த நிலையில் அவர் டெல்லியிலிருந்து இன்று விமானம் மூலம் ஸ்ரீநகர் புறப்பட்டுச் சென்றார்.
அடுத்த 2 மாதங்களில் இந்தியாவுடன் போர் மூளுமாம்... பாகிஸ்தான் அமைச்சரின் கொக்கரிப்பு