குட் நியூஸ்... ப.சிதம்பரம் கைது குறித்து இந்திராணி முகர்ஜி கமெண்ட்
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டது குட் நியூஸ் என்று இந்த வழக்கில் அப்ரூவராக மாறியுள்ள இந்திராணி முகர்ஜி கூறியுள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைதானதற்கு காரணமே ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் உரிமையாளர்களான இந்திராணி முகர்ஜியும், அவருடைய கணவர் பீட்டர் முகர்ஜியும் தான். இவர்களின் நிறுவனத்தின் 26 சதவீத பங்கு விற்பனை தொடர்பாக, ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் நடத்தும் நிறுவனம் மூலமாக கமிஷன் கை மாறியது என்பது தான் குற்றச்சாட்டு .
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்த இந்திராணி முகர்ஜி, அப்ரூவராக மாறிய பிறகே, வழக்கு விசாரணை விறுவிறுப்படைந்தது.முதலில் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டார். ப.சிதம்பரத்தை சந்தித்தது குறித்தும் இந்திராணி முகர்ஜி ஒப்புதல் வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார்.
இதனால்,இப்போது ப.சிதம்பரமும் கைது செய்யப்பட்டு சிபிஐயின் கஸ்டடியில் சிக்கித் தவிக்கிறார். அடுத்து அமலாக்கத்துறையும் கைது செய்ய தவியாய் தவித்துக் கொண்டுள்ளது. இதனால், ஜாமீன் கேட்டு, உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் சட்டப் போராட்டமும் நடத்தி வருகிறார். கடந்த திங்கட்கிழமை முதல் இன்று வரை 4 நாட்களாக உச்ச நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் வழக்கில் அனல் பறக்கும் வாதம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மகள் ஷீனா போராவை கொலை செய்த வழக்கில்,கணவர் பீட்டர் முகர்ஜியுடன் மும்பை சிறையில் உள்ள இந்திராணி முகர்ஜி, வழக்கு தொடர்பாக இன்று மும்பை உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த இந்திராணி முகர்ஜி, குட் நியூஸ் என்று கூறிவிட்டு வேகமாகச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்துடன் சிக்கும் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி