ஐஎன்எக்ஸ் வழக்கில் திருப்பம் : திகார் ஜெயில் வேணாம் சிபிஐ கஷ்டடியே போதும் என்ற ப.சி.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்தியமைச்சர் ப.சிதம்பரம் நிம்மதியின்றி தவிக்கிறார். அவருடைய சிபிஐ காவல் இன்றுடன் முடிவடையும் நிலையில், திகார் ஜெயிலுக்கு அனுப்பப்படும் நிலை உருவாகியுள்ளது. இதனால் திகார் ஜெயில் செல்வதை தவிர்க்க, சிபிஐ கஷ்டடியிலேயே வரும் திங்கட்கிழமை வரை தொடர ப.சிதம்பரம் தாமாகவே விருப்பம் தெரிவித்துள்ளது இந்த வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை கடந்த 20-ந் தேதி சிபிஐ கைது செய்தது. சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ப.சிதம்பரத்தை, முதலில் 5 நாட்களும் தொடர்ந்து 4 நாட்களும் தங்கள் கஷ்டடியில் எடுத்து விசாரித்து வருகிறது. சிபிஐ காவல் இன்றுடன் முடிவடைகிறது. இதனால் இன்று மீண்டும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
இந்நிலையில் சிபிஐ வழக்கில் ஜாமீன் கோரியும், அமலாக்கத்துறை கைது செய்யாமலிருக்க முன் ஜாமீன் கோரியும், உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தொடர்ந்த வழக்கில் சட்டப் போராட்டம் நீண்டு கொண்டே போய் இன்னும் விசாரணை முடியவில்லை. சிபிஐக்கு எதிரான வழக்கு வரும் திங்கட்கிழமையும், அமலாக்கத்துறைக்கு எதிரான வழக்கு செப்டம்பர் 5-ந் தேதியும் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. இதனால் அமலாக்கத்துறை 5-ந் தேதி வரை ப.சிதம்பரத்தை கைது செய்யக் கூடாது என்ற உத்தரவையும் பிறப்பித்துள்ளது.
உச்ச நீதிமன்ற விசாரணை நீண்டு கொண்டே போவதால், ப.சிதம்பரம் இன்று திகார் சிறையில் அடைக்கப்படும் வாய்ப்புகள் உருவாகியுள்ளது. இதனால் திகார் ஜெயில் செல்வதை தவிர்க்க, இந்த வழக்கில் புதிய திருப்பம் நிகழ்ந்துள்ளது. சிபிஐக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.பானுமதி மற்றும் போபண்ணா ஆகியோர் திங்கட்கிழமை ஒத்தி வைத்த போது ப.சிதம்பரம் தரப்பில் தாமாகவே முன்வந்து ஒரு கோரிக்கை விடப்பட்டது. அதாவது, திங்கட்கிழமை வரை சிபிஐ காவலிலேயே ப.சிதம்பரம் தொடர அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதற்கு சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.
ப.சிதம்பரத்தை சிபிஐ காவலுக்கு அனுப்பியது சிறப்பு நீதிமன்றம் தான். எனவே ப.சிதம்பரத்தை மீண்டும் சிபிஐ காவலுக்கு அனுமதிப்பதா? இல்லை திகார் சிறைக்கு அனுப்புவதா? என்பதை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று வாதிட்டு எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் ப.சிதம்பரம் தரப்பின் கோரிக்கையை பரிசீலிக்காமல், சிறப்பு நீதிமன்றத்தை நாடுமாறு தெரிவித்து விட்டனர்.
இந்நிலையில் தான் சிபிஐ காவல் முடிந்து இன்று ப.சிதம்பரம் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படள்ளார். அப்போது, ப.சிதம்பரத்தின் விருப்பப்படி, காவலை நீட்டிக்க சிபிஐ தரப்பு கோருமா? என்பதும், அந்தக் கோரிக்கையை சிறப்பு நீதிமன்றம் ஏற்குமா? என்பதும் தெரிந்து விடும். ஒரு வேளை சிபிஐ காவலுக்கு அனுப்ப நீதிபதி மறுப்பு தெரிவித்து விட்டால் ப.சிதம்பரம் இன்று திகார் ஜெயிலில் அடைக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
ட்விட்டர் கணக்கு இருக்கிறதா? சிதம்பரத்திடம் கேட்ட கேள்வி சி.பி.ஐ. மீது கபில்சிபல் குற்றச்சாட்டு