கருணாநிதியை விமர்சித்ததாக திமுக ஆட்சியில் தொடரப்பட்ட அவதூறு வழக்கு வைகோ விடுதலை
கடந்த 2006-ம் ஆண்டில் திமுக ஆட்சியின் போது முதல்வராக இருந்த கருணாநிதியை விமர்சித்ததாக தொடரப்பட்ட அவதூறு வழக்கிலிருந்து வைகோ விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2006-ம் ஆண்டு மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடிதம் எழுதியிருந்தார். அதில், அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, மதிமுகவை உடைக்க முயற்சிப்பதாக வைகோ குறிப்பிட்டிருந்தார். இதனால் வைகோவுக்கு எதிராக அரசுத் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இந்த அவதூறு வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி வைகோ முறையிட்டும் உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த நிலையில் வழக்கின் விசாரணை,சென்னையில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. ஆங்கில நாளேடு ஒன்றில் கருணாநிதியை குற்றம் சாட்டி பேசிய செய்தி வெளியானதை அடிப்படையாகக் கொண்டு இந்த அவதூறு வழக்கு தொடரப்பட்டிருந்தது.
எனவே, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நாளிதழின் தலைமை செய்தியாளர், வெளியீட்டாளர் உள்ளிட்டோரிடம் சாட்சிகள் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.குற்றச்சாட்டு பதிவு, சாட்சிகள் விசாரணை, சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை என அனைத்து நடைமுறைகளும் நிறைவடைந்துவிட்ட நிலையில், வழக்கின் மீதான தீர்ப்பு திங்கள்கிழமை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வைகோ, சிறப்பு நீதிமன்றத்தில், அன்றைய தினம் ஆஜராகவில்லை. எனவே தீர்ப்பு வழங்கப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் அவதூறு வழக்கில், நீதிபதி கருணாநிதி இன்று தீர்ப்பு வழங்கினார். வைகோவுக்கு எதிரான குற்றச்சாட்டில் போதிய ஆதாரங்கள் இல்லையென்றும், வெறுமனே பத்திரிகை செய்தியை வைத்து தொடரப்பட்ட இந்த வழக்கில் இருந்து வைகோவை விடுதலை செய்வதாக நீதிபதி கருணாநிதி உத்தரவிட்டார்.
ரூ.100 தராமல் செல்பி எடுப்பதா? ஆசையாக வந்தவரை ஏமாற்றிய வைகோ