அமமுகவில் வகித்த அதே பதவி: திமுக கொள்கை பரப்பு செயலாளரானார் தங்க. தமிழ்செல்வன்

தினகரனின் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த தங்க. தமிழ்செல்வனுக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா காலத்தில் தேனி மாவட்ட அதிமுகவில் அசுர வளர்ச்சி அடைந்தவர் தங்க. தமிழ்செல்வன். தேனி மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பில் பல ஆண்டுகள் இருந்த தங்க தமிழ் செல்வன், ஜெயலலிதாவின் ஆசி இருந்ததால் ஓபிஎஸ்சுக்கு எதிராகவே பல ஆண்டுகள் அரசியல் நடத்தியவர்.

ஜெ. மறைவுக்குப் பின் டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளராக மாறிய தங்க. தமிழ்செல்வன், அமமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார். கட்சியிலும் தினகரனுக்கு அடுத்த இடத்தில் முக்கியத்துவம் பெற்றார்.

ஆனால், சமீபத்திய தேர்தலில் அமமுகவின் நிலை அந்தோ பரிதாபமாகிவிட, தினகரதுக்கும் தங்க. தமிழ்செல்வனுக்கும் இடையே லடாய் ஏற்பட்டது. இதனால், 2 மாதங்களுக்கு முன் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் ஐக்கியமானார் தங்க. தமிழ்செல்வன். உடனடியாக திமுகவில் முக்கியப் பொறுப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், தற்போது அவரை திமுக கொள்கை பரப்புச் செயலாளராக நியமித்துள்ளது திமுக தலைமை .

இது குறித்து திமுக தலைமைக் கழகம் சார்பில் வெளியான அறிவிப்பில், ஆ.ராசா, திருச்சி சிவா ஆகியோர் திமுக கொள்கைபரப்பு செயலாளராக உள்ள நிலையில் 3-வதாக தங்கதமிழ்செல்வன் திமுக கொள்கை பரப்பு செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த வி.பி.கலைராஜன், திமுக இலக்கிய அணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அமமுகவில் இருந்து திமுகவுக்கு சென்ற முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திமுகவில் உடனடியாக கரூர் மாவட்டப்பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது.அத்துடன் அரவக்குறிச்சி தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளராகி வெற்றி பெற்று எம்எல்ஏவாகவும் செந்தில் பாலாஜி ஆகிவிட்டார். இந்நிலையில் தங்க. தமிழ்செல்வனுக்கும், அமமுகவில் அவர் வகித்த அதே கொள்கை பரப்புச் செயலாளர் பொறுப்பை வழங்கியுள்ளது திமுக மேலிடம் என்பது குறிப்பிடத்தக்கது.

குட் நியூஸ்... ப.சிதம்பரம் கைது குறித்து இந்திராணி முகர்ஜி கமெண்ட்

More News >>