ஐஎன்எக்ஸ் வழக்கு : ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் திங்கள் வரை நீட்டிப்பு
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் வரும் திங்கட்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை, கடந்த 20-ந் தேதி சிபிஐ கைது செய்தது. சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ப.சிதம்பரத்தை, முதலில் 5 நாட்களும் தொடர்ந்து 4 நாட்களும் தங்கள் கஷ்டடியில் எடுத்து விசாரித்து வந்தது. சிபிஐ காவல் இன்றுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது,ப.சிதம்பரத்திடம் இன்னும் விசாரிக்கப்பட வேண்டியுள்ளதால், மேலும் 5 நாட்களுக்கு காவலை நீட்டிக்குமாறு சிபிஐ தரப்பில் கோரிக்கை விடப்பட்டது. இதற்கு ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது. எனவே அதுவரை வேண்டுமானால் காவலை நீட்டித்துக் கொள்ள சம்மதம் என ப.சிதம்பரம் தரப்பில் பெருந்தன்மையாக சம்மதம் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, வரும் திங்கட்கிழமை (செப்டம்பர் 2) வரை சிபிஐ காவலை நீட்டிக்க சிறப்பு நீதிமன்றம் வழங்கியது.
இன்றைக்கு சிபிஐ காவலை நீட்டிக்க சிறப்பு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருந்தாலோ அல்லது ப.சிதம்பரம் தரப்பும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலோ ப.சிதம்பரம் திகார் சிறைக்கு செல்ல வேண்டியிருந்திருக்கும். ஆனால் திகார் சிறை செல்ல விரும்பாத ப.சிதம்பரம், திகாரை விட சிபிஐ கெஸ்ட் ஹவுசே பெட்டர் என பெருந்தன்மையாக சிபிஐ காவலுக்கு ஒத்துக்கொண்டார் என்றே கூறப்படுகிறது.