மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டிவி சேனல் - கமல் பிறந்த நாளில் தொடக்கம்?
மக்கள் நீதி மய்யம் கட்சிக்காக புதிய டிவி சேனல் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கமல்ஹாசனின் பிறந்த நாளில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியை நடிகர் கமல் கடந்தாண்டு தொடங்கினார். கட்சி தொடங்கிய சில மாதங்களிலேயே மக்களவை பொதுத் தேர்தலையும் சந்தித்தார். மாநிலம் முழுவதும் கட்சிக்கு நிர்வாகிகளை நியமித்து, மக்களவை மற்றும் 17 சட்டப்பேரவை இடைத்தேர்தல் களத்தில் வேட்பாளர்களை நிறுத்தினார்.
கட்சியின் நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்களில் பெரும்பாலானோர், உயர் பதவி வகித்து ஓய்வு பெற்ற அதிகாரிகள், பெரும் தொழிலதிபர்கள் மற்றும் பிரபலங்கள் ஆவர். மேலும் பிரச்சார யுக்தியையும் ஹைடெக் பாணியில் கையாண்ட கமலின் கட்சிக்கு கொங்கு மண்டலத்திலும், நகர்ப்புற வாக்காளர்களிடமும் ஓரளவுக்கு ஆதரவு கிடைத்தது. இதனால் கணிசமான வாக்குகளை பெற்றதன் மூலம், அடுத்து 2021-ல் நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்கூட்டியே ஆயத்தமாகத் தொடங்கி விட்டார்.
இதன் ஒரு கட்டமாக, கட்சிக்காக சொந்த டிவி சேனல் ஒன்றை தொடங்க கமல் முடிவு செய்துள்ளாராம். இதற்காக தற்போது தமிழகத்தின் பிரபல நதி ஒன்றின் பெயருடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தமிழ் சேனல் ஒன்றை விலை பேசி முடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. கமலின் 65-வது பிறந்த நாளான வரும் நவம்பர் 7-ம் தேதி புதிய சேனல் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
இதை உறுதி செய்வது போல் மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரனும், கட்சிக்காகடிவி சேனல் தொடங்கும் திட்டம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.