பொதுத் துறை வங்கிகள் இணைப்பு நிர்மலா சீத்தாராமன் அறிவிப்பு
நாட்டின் 4 பெரிய பொதுத்துறை வங்கிகளுடன், 6 சிறிய பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
வங்கிகளின் செயல்பாட்டை மேம்படுத்தும் வகையில், 4 பெரிய வங்கிகளுடன், 6 சிறிய வங்கிகள் இணைக்கப்படும். பஞ்சாப் நேஷனல் வங்கியுடன்(பி.என்.பி), ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ், யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா ஆகிய 2 வங்கிகளும் இணைக்கப்படுகின்றன. இதற்குப் பிறகு, பி.என்.பி. வங்கி, நாட்டின் 2 வது பெரிய வங்கியாக உருவெடுக்கும். இதில், 11 ஆயிரத்து 437 கிளைகள் இருக்கும். இதன், ஆண்டு வர்த்தகம் ரூ.17 லட்சத்து 95 ஆயிரம் கோடியாக உயரும்.
அடுத்ததாக, கனரா வங்கியுடன் சிண்டிகேட் வங்கி இணைக்கப்படும். இது 4-வது பெரிய வங்கியாக மாறும். இதில் 10 ஆயிரத்து 324 கிளைகள் இருக்கும். இதன் ஆண்டு வர்த்தகம் ரூ.15 லட்சத்து 20 ஆயிரம் கோடியாக உயரும் யூனியன் பாங்க் ஆப் இந்தியாவுடன் ஆந்திரா வங்கியும், கார்ப்பரேஷன் வங்கியும் இணைக்கப்படும். இது 5-வது பெரிய வங்கியாக இருக்கும். இது 9,609 கிளைகளை பெற்றிருக்கும். இதன் ஆண்டு வர்த்தகம் ரூ.14 லட்சத்து 59 ஆயிரம் கோடியாக இருக்கும்.
இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கி இணைக்கப்படும். இது நாட்டின் 7-வது பெரிய வங்கியாக இருக்கும். இதன் ஆண்டு வர்த்தகம் ரூ.8 லட்சத்து 8 ஆயிரம் கோடியாகும். இந்த இணைப்புகளுக்கு பிறகு, பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 12 ஆக குறையும். இதன்படி, பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி, பாங்க் ஆப் இந்தியா, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் பரோடா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யூகோ வங்கி, பாங்க் ஆப் மகாராஷ்டிரா, பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி ஆகியவை பொதுத்துறை வங்கிகளாக இருக்கும்.
பொதுத்துறை வங்கிகளில் கடந்த 2018ம் ஆண்டு இறுதியில் வராக் கடன்கள் ரூ.8 லட்சத்து 65 ஆயிரம் கோடியாக இருந்தது. இந்த ஆண்டு மார்ச் இறுதியில் வராக்கடன்கள் ரூ.7 லட்சத்து 90 ஆயிரம் கோடியாக குறைந்துள்ளது.
இவ்வாறு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார்.
மாருதி சுசுகி கம்பெனியில் 3,000 தொழிலாளர் வேலையிழப்பு<