விரக்தியடைந்த இம்ரான்கான், பிரதமர் மோடி மீது பாய்ச்சல்
காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளின் ஆதரவை பெற முடியாமல் விரக்தியடைந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், நமது பிரதமர் மோடி மீது கடுமையாக விமர்சனம் செய்யத் தொடங்கியுள்ளார்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது. அத்துடன் காஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்புகள் எழும் என்று எதிர்பார்த்து முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா உள்பட ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்திய அரசின் நடவடிக்கைகளால் காஷ்மீருக்குள் தீவிரவாதிகள் நுழைவது கட்டுப்படுத்தப்படுவதுடன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் தீவிரவாதிகளின் செயல்பாடுகள் தடுக்கப்படும் என்பதால், பாகிஸ்தான் அரசு கடும் கோபம் கொண்டது. காஷ்மீர் பிரச்னையை ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலுக்கு எடுத்து சென்றது. ஆனால், இது இருநாடுகளும்தான் பேசி தீர்க்க வேண்டுமே தவிர சர்வதேச நாடுகளுக்கு இதில் வேலை இல்லை என்று இந்தியா உறுதியாக கூறியது. இதையடுத்து, சர்வதேச கவுன்சில் இந்த பிரச்னையை கைவிட்டது.
அதே போல், காஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறி வந்தார். ஆனால், மூன்றாவது நாடு இந்த விஷயத்தில் தலையிட முடியாது என்பதே இந்தியாவின் நீண்ட நாள் கொள்கை முடிவு என்று இந்தியா தரப்பில் உறுதியாக தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அமெரிக்காவும் காஷ்மீர் விவகாரத்தில் இருநாடுகளும் பேசி சுமுக நிலையை ஏற்படுத்த வேண்டுமென்று கூறி, கழன்றுவிட்டது.
இதன்பின்னர், பாகிஸ்தான் அரசு, இந்தியாவில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்னைகளை, குறிப்பாக காஷ்மீரில் அடக்குமுறை என்று ராகுல்காந்தி விமர்சித்ததை மேற்கோள் காட்டி பிரச்னையை ஐ.நா.வுக்கு எடுத்து செல்ல முயன்றது. ஆனால், ராகுல்காந்தி உடனடியாக கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார். பாகிஸ்தானே உலகில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு கொடுக்கும் நாடு என்றும், காஷ்மீர் பிரச்னை எங்கள் உள்நாட்டு விவகாரம் என்றும் அறிக்கை விட்டார்.
இந்நிலையில், விரக்தியடைந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இந்தியாவுக்கு எதிராக எதுவும் சொல்ல முடியாமல், பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் விமர்சித்து வருகிறார். நியூயார்க் டைம்ஸ் என்ற அமெரிக்க பத்திரிகையில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் மோடியை பழைய சம்பவங்களை சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளார். கடந்த 2002ம் ஆண்டில் குஜராத்தில் நடந்த கலவரங்களுக்கு மோடி பொறுப்பு என்றும், அதனால்தான் 2005ல் அமெரிக்க விசா அவருக்கு மறுக்கப்பட்டது என்றும் அவர் எழுதியுள்ளார். பிரதமராக பொறுப்பேற்ற பின்பு அவர் மாறுவார் என்று தாம் எதிர்பார்த்ததாகவும், ஆனால் சிறுபான்மையினருக்கு எதிரான அவரது போக்கும், பா,ஜ.க.வினரின் வெறுப்புணர்வு செயல்களும் மாறவில்லை என்றும் இம்ரான்கான் குறிப்பிட்டுள்ளார்.
இம்ரான்கானின் பொய் பிரச்சாரங்களுக்கு இந்தியா தரப்பி்ல் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
மோடியின் இங்கிலீஸ் நல்லாத்தான் இருக்கு... ஆனா பேசத்தான் மாட்டேங்கிறார்... டிரம்ப் ஜோக்