கிங்ஸ்டன் டெஸ்ட் : கோஹ்லி, விஹாரி அபார ஆட்டத்தால் இந்தியா 264/5
மே.இ.தீவுகளுக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி மற்றும் மயங்க் அகர்வாலின் அரைசதம் கைகொடுக்க, முதல் 264/5 நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்துள்ளது.
கிங்ஸ்டன் சபீனா பார்க் மைதானத்தில் நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டி டாஸ் வென்ற மே.இ.தீவுகள் கேப்டன் ஹோல்டர் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய வீரர்களே இந்தப் போட்டியிலும் களமிறங்கினர்.ஓபனிங் இறங்கிய லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால் ஜோடி, மே.இ.தீவுகளின் வேகப்பந்து வீச்சில் திணறல் தொடக்கத்தை தந்தனர். இந்தப் போட்டியிலும் சோபிக்கத் தவறிய ராகுல் 13 ரன்களில் ஹோல்டரிடம் அவுட்டானார்.தொடர்ந்து வந்த புஜாராவும் 6 ரன்களில் கார்ன் வெல்லிடம் வீழ்ந்தார்.
பின்னர் வந்த கேப்டன் கோஹ்லி, மேலும் விக்கெட் விழாமல் இருக்க தற்காப்பு ஆட்டத்தில் இறங்கினார். மறுபுறம் மயங்க் அகர்வால் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தார். இந்த ஜோடி ஓரளவுக்கு இந்திய அணியின் சரிவை சரிக்கட்டிய நிலையில் அகர்வால் 55 ரன்களுடன் அவுட்டானார்.தொடர்ந்து ரஹானே 24 ரன்களுடனும், அரைசதம் கடந்து 76 ரன்கள் எடுத்திருந்த கேப்டன் கோஹ்லியும் அடுத்தடுத்து வெளியேறினர்.
அதன் பின் விஹாரியும் (42), கீப்பர் ரிஷப் பண்ட் (27), இருவரும் ஜோடி சேர்ந்து விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் என்ற வலுவான நிலையில் இந்திய அணி உள்ளது.
மே.இ.தீவுகள் தரப்பில் ஹோல்டர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். உலகின் அதிக எடை கொண்ட (140 கிலோ) கிரிக்கெட் வீரர் என்ற சாதனையுடன் இந்தப் போட்டியில் மே.இ.தீவுகளின் ரகீம் கார்ன்வெல் அறிமுகமானார். புஜாராவை அவுட்டாக்கியதன் மூலம் தனது முதல் விக்கெட்டை பதிவு செய்தார்.
மே.இ.தீவுகளுக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட இத்தொடரில் இந்தியா 1-0 என முன்னிலையில் உள்ளது. இந்தப் போட்டியிலும் வெற்றி பெறுவதன் மூலம் டி-20, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடர் என அனைத்து தொடர் களையும் கைப்பற்றிய சாதனையை இந்தியா படைக்கும்.
மே.இ.தீவுகளுக்கு எதிரான தொடரை வெல்லுமா இந்தியா?கிங்ஸ்டனில் இன்று கடைசி டெஸ்ட்