பாகிஸ்தானில் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட சீக்கியப் பெண் மீட்பு - 8 பேர் கைது
பாகிஸ்தானில் கடத்தப்பட்டு, கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட சீக்கிய இளம் பெண் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.இச்சம்பவம் தொடர்பாக 8 பேரை கைது செய்துள்ளதாக பாகிஸ்தான் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் நங்கனா சாஹிப் பகுதியில் சீக்கியர்கள் அதிகம் வசிக்கின்றனர். அங்குள்ள குருத்வாரா ஒன்றில் கிராந்தியாக பணியாற்றுபவர் பகவான் சிங். இவரின் 19 வயது மகளை சில நாட்களுக்கு முன்பு ஒரு கும்பல் கடத்திச் சென்றது. அந்தப் பெண்ணை துப்பாக்கி முனையில் மிரட்டிய கும்பல், இஸ்லாம் மதத்திற்கு கட்டாய மதமாற்றம் செய்து, முஸ்லீம் இளைஞர் ஒருவருக்கு திருமணம் செய்து விட்டதாம்.
இது பற்றிய தகவல், பஞ்சாபைச் சேர்ந்த சிரோன்மணி அகாலி தள கட்சி எம்எல்ஏ மஞ் சிந்தர் சிங் என்பவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றின் மூலம் பரவியது. இந்த வீடியோவில் கடத்தப்பட்ட பெண்ணின் பெற்றோர் கதறியழுதபடி குரல் கொடுத்திருந்தனர்.இதைக் கண்டு உலகம் முழுவதும் உள்ள சீக்கியர்களும் பதறிப் போய், கடத்தப் பெண்ணை மீட்குமாறு குரல் கொடுத்தனர். பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங்கும், கடத்தப்பட்ட பெண்ணை மீட்க இந்திய மற்றும் பாகிஸ்தான் அரசுகள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதைத் தொடர்ந்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் முனைப்பு காட்டி, பாகிஸ்தானிடம் பிரச்னையை கொண்டு சென்றது.
இந்நிலையில் கடத்தப்பட்ட சீக்கிய பெண்ணை மீட்டு, அவருடைய பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டதாக பாகிஸ்தானின் நங்கனா சாஹிப் நகர போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்தக் கடத்தல், கட்டாய மதமாற்றம், கட்டாயத் திருமணம் என சீக்கியப் பெண்ணை கொடுமைப்படுத்திய கும்பலைச் சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.