ஆந்திரா: அரசு கட்டடங்களுக்கு கட்சி கொடி கலரில் பெயிண்ட்? ஜெகன் மோகனுக்கு பாஜக கடும் எதிர்ப்பு

ஆந்திராவில் கிராமங்கள் தோறும் கட்டப்பட்டு வரும் அரசு கட்டடங்களுக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி கொடியைப் போன்று பெயிண்ட் அடிக்க ஜெகன் மோகன் அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஆட்சிக்கு வரும் கட்சிகள், தங்கள் கட்சியின் கொடி,சின்னங்களை, அரசுப்பணத்தில் ஏதோ ஒரு வகையில் விளம்பரப்படுத்துவது பல காலமாக நடந்து வருகிறது. உ.பி.யில் மாயாவதி இருந்த போது ஊர், ஊருக்கு தன் கட்சியின் சின்னமான யானையின் சிலைகளை பிரமாண்டமான சைசில் எழுப்பி சர்ச்சைக்கு ஆளானார். எம்ஜிஆர் நினைவிடத்தின் முகப்பை இரட்டை இலைபோல் வடிவமைத்ததாக தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மீதும் குற்றச்சாட்டு எழுந்தது. அதே போல் தனக்குப் பிடித்த பச்சை வண்ணக் கலரில் அரசு அலுவலகங்களின் பெயர்ப் பலகைகளில் இடம் பெறச் செய்தார் ஜெயலலிதா. இதனால் டாஸ்மாக் கடைகளின் பெயர்ப் பலகை கூட பச்சை வண்ணமாகி விட்டது.

மத்தியில் ஆளும் பாஜகவும், தனது காவி நிறத்தை ஏதேனும் ஒரு வகையில் இடம் பெறச் செய்ய முயற்சிகள் எடுத்து வருகிறது. இதனால், பாஜகவுக்கு ஆமாம் போடும் தமிழக அரசும் ஆர்வக்கோளாறில் பள்ளிப் பாடப்புத்தகத்தில் பாரதியின் தலைப்பாகையையே காவி நிறமாக்கி சர்ச்சை ஏற்பட்டது.மதுரையின் அடையாளமாக திகழும் வைகை ஆற்றின் குறுக்கே பிரிட்டிசார் காலத்தில் கட்டப்பட்ட ஏ.வி.பாலத்திற்கும் காவி நிறம் பூச முயற்சி எழுந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழ கைவிடப்பட்டது.

இப்போது ஆந்திராவில் ஆட்சிக்கு வந்துள்ள ஜெகன்மோகன் ரெட்டி தமது கட்சியின் கொடியை பிரதிபலிக்கும் வகையில் அரசு கட்டடங்களுக்கு பெயிண்ட் அடிக்க உத்தரவிட்டுள்ளதும் சர்ச்சையாகியுள்ளது. ஆட்சிக்கு வந்த ஓரிரு மாதங்களிலேயே அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் ஜெகன் மோகன். அதன் ஒரு கட்டமாக, அரசின் அனைத்து திட்டங்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் கிராமங்கள் தோறும் சச்சிவாலயம் எனும் கிராம நிர்வாக அலுவலகங்களை கட்டி வருகிறார். காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ந் தேதி, ஆந்திரா முழுவதும் கட்டப்பட்டுள்ள இந்த அலுவலகங்கள் திறக்கப்பட உள்ளன.

இந்தக் கட்டடங்களுக்கு எந்த நிறத்தில் பெயிண்ட் அடிக்க வேண்டும் என அம்மாநில ஊரக வளர்ச்சித் துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அதன் மாடலும் அனுப்பி, வைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலை பார்க்கும் போது அச்சு அசலாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் கொடியின் நிறத்தை பிரதிபலிப்பதாக இப்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் லங்கா தினகர் கூறும்போது, கட்சியின் விளம்பரத்துக்காக மக்களின் வரிப்பணத்தை செலவிடுவதா? என்று கண்டனம் தெரிவித்துள்ளார். வேண்டுமானால் சொந்தக் காசில் விளம்பரப்படுத்த வேண்டியது தானே? என்றும் காட்டமாக கூறியுள்ளார்.

சென்னையில் பெரிய கோயில் கட்ட திருப்பதி தேவஸ்தானம் திட்டம்; தேவஸ்தான போர்டு தலைவர் பேட்டி

More News >>