யார் அக்கவுண்ட்டை ஹேக் பண்ணியிருக்காங்க தெரியுமா?

ட்விட்டர் நிறுவனத்தின் உடன் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான ஜேக் டோர்ஸியின் ட்விட்டர் கணக்கு கைப்பற்றப்பட்டு இனவெறி பதிவுகள் இடப்பட்டுள்ளன.

ஜேக் டோர்ஸியை ட்விட்டரில் 40 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர். அவரது ட்விட்டர் கணக்கு 'சக்லிங் ஸ்வாட்' (நமுட்டுச் சிரிப்பு படை) என்று தங்களுக்குத் தாங்களே பெயரிட்டுக்கொண்ட குழுவினரால் கால் மணி நேரம் கைப்பற்றப்பட்டுள்ளது.

ட்விட்டர் நிறுவனம், தங்கள் பாதுகாப்பு ஊடுருவ முடியாதது என்றும், ஜேக் டோர்ஸியின் ட்விட்டர் கணக்குக்குடன் இணைந்த மொபைல் எண்ணுக்காக பாதுகாப்பு குறைபாடே இதற்குக் காரணம் என்றும் கூறி தொலைதொடர்பு நிறுவனத்தின்மேல் ட்விட்டர் பழி சுமத்தியுள்ளது.

'சிம்ஸ்வப்பிங்' அல்லது 'சிம்ஜாக்கிங்' என்று கூறப்படும் தொழில்நுட்பம் மூலம் டோர்ஸியின் கணக்குக் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. மொபைல் சேவை நிறுவனங்களின் பணியாளர்களுக்கு லஞ்சம் கொடுத்து, பயன்பாட்டில் இருக்கும் ஒருவரின் எண்ணை வேறொரு சிம் கார்டுக்கு மாற்றுவதன் மூலம் அந்த எண் தொடர்பான நடவடிக்கைகளை முறைகேடாக கைப்பற்றுவதே 'சிம்ஸ்வப்பிங்' எனப்படுகிறது.

இத்தொழில்நுட்பம் மூலம் வேறொரு மொபைல் போனிலிருந்து குறுஞ்செய்தியாக ஜேக் டோர்ஸியின் ட்விட்டர் கணக்கில் பதிவுகள் செய்யப்பட்டுள்ளன. யூத பெருங்கொலையை காட்டி ஹீப்ரூ மக்களுக்கு எதிரான (ஆன்ட்டிசெமிட்டிக்) கருத்துகளையும், கறுப்பினத்தவரை குறித்த அவச்சொல்லையும் பதிவிட்டுள்ளனர். ட்விட்டர் நிறுவனத்தின் தலைமையகத்தில் வெடிகுண்டு இருப்பதாகவும் ஒரு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜேக் டோர்ஸியின் ட்விட்டர் கணக்கு கைப்பற்றப்பட்டது குறித்து செய்திகளை பகிர்ந்து கேலி செய்யும்படி டிஸ்கார்ட் சமூக தளத்தில் தனி இணைய தளம் ஒன்று தொடங்கப்பட்டு, உடனடியாக மூடப்பட்டுள்ளது.

திருநெல்வேலிக்கே அல்வா என்பதுபோல ட்விட்டர் தலைமை செயல்அதிகாரியின் கணக்கையே கைப்பற்றி அதிர்ச்சியளித்துள்ளனர் சமூக விரோதிகள்.

More News >>