ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு மீண்டும் சேவைக் கட்டணம் : நாளை முதல் அமல்
ரயில் பயணத்திற்கு ஆன்லைன் மூலம் முன் பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கு மீண்டும் சேவைக் கட்டணத்தை ரயில்வே அதிரடியாக அறிவித்துள்ளது. ஏ.சி வகுப்புக்கு ரூ 30, ஏ.சி. அல்லாத வகுப்புக்கு ரூ 15 சேவைக் கட்டணமும் அதற்கு ஜிஎஸ்டி வரியும் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவைக் கட்டணம் வசூல் நாளை முதலே அமலுக்கு வருகிறது.
ஐஆர்சிடிசி மூலம் ஆன்லைனில் முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்டுகளுக்கு சேவைக் கட்டணமாக ஏ.சி வகுப்புக்கு ரூ 40, ஏ.சி. அல்லாத வகுப்புக்கு ரூ 20 என முன்னர் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆன்லைன் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் பொருட்டு, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சேவைக் கட்டணத்தை மத்திய அரசு ரத்து அடியோடு ரத்து செய்தது.
சேவைக் கட்டணம் ரத்து செய்யப்பட்ட பின்னர், கடந்த 3 ஆண்டுகளில் ஆன்லைனில் முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது. இந்நிலையில், ரயில்வேக்கு 26 சதவீதம் வரை வருவாய் இழப்பு என்பதை காரணம் காட்டி, இப்போது மீண்டும் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும் என ரயில்வே அதிரடியாக அறிவித்துள்ளது. முன்னர் சேவைக் கட்டணம் ரத்து செய்யப்பட்டது தற்காலிகமாகத் தான் அறிவிக்கப்பட்டிருந்தது என்றும் காரணம் கூறப்பட்டுள்ளது.
இதனால், ஏ.சி.பெட்டிகளில் அனைத்து வகுப்புக்கும் ரூ 30, ஏ.சி. அல்லாத படுக்கை வசதியுடன் கூடிய 2-ம் வகுப்புக்கு ரூ 15 கூடுதலாக சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், இதற்கு ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்படும் என்றும் ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சேவைக் கட்டண வசூல் நாளை முதலே அமலுக்கு வருகிறது.