கிங்ஸ்டன் டெஸ்ட் : மே.இ.தீவுகளை அலறவிட்ட பும்ரா - இந்தியா வலுவான முன்னிலை

மே.இ.தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்தியா வலுவான முன்னிலை பெற்றுள்ளது.விஹாரியின் சதம், இஷாந்தின் அரைசதம் மூலம் இந்தியா 416 ரன்களை குவித்தது. தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய மே.இ.தீவுகள் 87 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து பரிதவிக்கிறது. வேகத்தில் அலறவிட்ட பும்ரா, ஹாட்ரிக் உட்பட 6 விக்கெட்டுகளை சாய்த்து சாதித்தார்.

கிங்ஸ்டனில் நடைபெற்று வரும் மே.இ.தீவுகளுக்கு எதிரான 2-வது போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது.முதல் நாள் ஸ்கோரான 6 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் என்ற நிலையில், விஹாரியும் (42), ரிஷப்பன்ட்டும் (27) களமிறங்கினர். ஹோல்டரின் முதல் பந்திலேயே ரிஷப் பண்ட் அவுட்டாகி ஏமாற்றினார். அடுத்து வந்த ஜடேஜா 16 ரன்களில் நடையை கட்டினார்.

இதைத் தொடர்ந்து விஹாரியுடன் ஜோடி சேர்ந்த இஷாந்த் சர்மா வழக்கத்துக்கு மாறாக பொறுப்புடன் ஆடினார். இவருடைய ஒத்துழைப்பால், மறுமுனையில் விஹாரி மளமளவென ரன்களை சேர்த்து டெஸ்ட் அரங்கில் முதல் சதத்தை பதிவு செய்தார். இஷாந்தும் தன் பங்குக்கு அரை சதம் கடந்து, தனது 13 ஆண்டு கால டெஸ்ட் போட்டி வரலாற்றில் 92-வது போட்டியில் முதல் அரை சதத்தை பதிவு செய்தார். விஹாரி 111 ரன்களிலும், இஷாந்த் சர்மா 57 ரன்களிலும் வெளியேற, ஷமியும் டக் அவுட்டாக இந்தியா முதல் இன்னிங்சில் 416 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.மே.இ.தீவுகள் தரப்பில் ஹோல்டர் 5 விக்கெட்டுகளையும், முதல் போட்டியில் களமிறங்கிய கார்ன்வால் 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய மே.இ.தீவுகளுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்தார் பும்ரா.வேகத்தில் மிரட்டிய பும்ரா, மே.இ.தீவுகள் வீரர்களை வரிசையாக பெவிலியனுக்கு வழியனுப்பி வைத்தார். 6 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா, இதில் 9-வது ஓவரில் தொடர்ந்து 3 விக்கெட்களை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார். இதற்கு முன் இந்திய அணியில் ஹர்பஜன், இஷாந்த் சர்மா ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் ஹாட்ரிக் சாதனை படைத்திருக்க, இந்த சாதனையை படைத்த 3-வது வீரர் என்ற பெருமையை பும்ரா பெற்றார். இதனால் 2-வது நாள் ஆட்ட முடிவில் மே.இ.தீவுகள் 87 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து பரிதாபமான நிலையில் உள்ளது.

முதல் இன்னிங்சில் 329 ரன்கள் முன்னிலை பெற்று இந்தியா வலுவான நிலையில் உள்ளது. இன்னும் 3 நாட்கள் ஆட்டம் எஞ்சியுள்ள நிலையில் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு உறுதியாகியுள்ளது என்றே கூறலாம். டெஸ்ட் தொடரையும் 2-0 என்ற கணக்கில் வென்று, மே.இந்திய தீவுகள் மண்ணில் டி-20, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் என அனைத்து தொடர்களையும் வென்ற சாதனையை படைக்க உள்ளது.

More News >>