வாகன ஓட்டிகளே உஷார்..! போதைக்கு ரூ10,000, ஹெல்மெட் இல்லையா 1000, மொபைல்ல பேசுனா 5000.! இன்று முதல் வசூல்

போக்குவரத்து விதிகளை கடுமையாக அமல்படுத்தும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதனால் விதிகளை மீறுவோர் பல மடங்கு அபராதம் செலுத்த நேரிடுவதுடன், சிறை செல்ல நேரிடும் என்பதால் வாகன ஓட்டிகள் உஷாராக இருப்பதே நல்லது.

சாலை வசதிகள் அதிகரித்து, போக்குவரத்து வாகனங்களும் அதிகரித்து விட்ட நிலையில், விபத்துகளும் எக்கச்சக்கமாகி விட்டது. இதற்கு காரணம் போக்குவரத்து விதி மீறல்களும், உரிய பாதுகாப்பில்லாமல் ஓட்டுவதும், குறிப்பாக போதையில் தாறுமாறாக ஓட்டுவதும் தான். எனவே போக்குவரத்து விதிகளை கடுமையாக்கும் வகையில், மோட்டார் வாகனச் சட்டத்தில் அதிரடியாக மாற்றம் கொண்டு வந்தது மத்திய அரசு .

இதனால் திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்ட மசோதாவை கொண்டு வந்த மத்திய அரசு, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இந்த புதிய சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் இனி விதி மீறல் வாகனங்களுக்கு அபராதம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, இனி குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் அபராதமாக ரூ 10 ஆயிரம் அல்லது 6 மாத சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும். அதிவேகமாக கார் ஓட்டினால் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் கட்ட வேண்டும். மொபைல் போனில் பேசியபடி ஓட்டினால் ரூ 5 ஆயிரமும், காரில் சென்றால் சீட் பெல்ட் கட்டாவிட்டாலோ, இரு சக்கர வாகன ஓட்டியும், பின்னால் அமர்ந்திருப்பவரும் ஹெல்மெட் போடாவிட்டாலோ ரூ ஆயிரமும் அபராதம் வசூலிக்கப்படும்.

அதே போல் உரிய ஆவணங்கள் இல்லாவிட்டாலும் ரூ 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரையும், ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு வழிவிடாமல் சென்றால் ரூ 10 ஆயிரம் அபராதம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி 18 வயது நிரம்பாத பிள்ளைகளை வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர்கள், இந்த புதிய சட்டத்தின்படி சிறை செல்ல வேண்டிய நிலையும் உள்ளது. இன்று முதல் இந்தச் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. எனவே, வாகனம் வைத்திருப்போர், ஓட்டு வோர் உஷாராக இருக்க வேண்டியதும் கட்டாயமாகிறது.

More News >>