தமிழிசைக்கு புரமோஷன்..! தெலுங்கானா ஆளுநராக நியமனம்
தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக காங்கிரசில் மூத்த தலைவராக உள்ள குமரி அனந்தனின் மகளான டாக்டர் தமிழிசை சவுந்தர்ராஜன், பாஜகவில் கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் இணைந்தார். கட்சியின் அடிமட்டத்திலிருந்து, மருத்துவ அணிச் செயலாளர், கட்சியின் மாநில செயலாளர், துணைத் தலைவர் என படிப்படியாக முன்னேற்றம் கண்டு தற்போது மாநிலத் தலைவராக பணியாற்றி வருகிறார்.
கட்சியின் தலைவர் பதவியில் சிறப்பாக பணிபுரிந்து வந்த தமிழிசைக்கு எம்.எல்.ஏ, எம்.பி பதவிகள் மட்டும் வசப்படவில்லை. 2006, 2011 சட்டப்பேரவைத் தேர்தலிலும், கடந்த மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடியில் கனிமொழியை எதிர்த்தும் போட்டியிட்டும் தோல்வியையே சந்தித்தார். தமிழக பாஜக தலைவர் பதவிக் காலமும் வரும் டிசம்பர் மாதம் முடிவடைய உள்ள நிலையில், அவர் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆளுநராக நியமிக்கப்பட்டது குறித்து தமிழிசை மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கட்சியில் கடின உழைப்புக்கு பிரதமர் மோடியும், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவும் கொடுத்த அங்கீகாரமாக கருதுகிறேன் என தமிழிசை சவுந்தர்ராஜன் பெருமையாக தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா மட்டுமின்றி கேரளா, மகாராஷ்டிரா, இமாச்சல், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கும் ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.கேரள மாநிலத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஆரிப் முகமது கான், மகாராஷ்டிராவுக்கு பகத்சிங் கோஸ்யாரி, இமாச்சல் பிரதேசத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா ஆகியோர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். இமாச்சல் ஆளுநராக இருந்த கல்ராஜ் மிஸ்ரா ராஜஸ்தான் மாநில ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார்.