பா.ஜ.கவுக்கு தற்காலிக தலைவர் இல.கணேசன் வலியுறுத்தல்

தமிழக பா.ஜ.க.வுக்கு தற்காலிக தலைவரை உடனடியாக நியமிக்க வேண்டுமென்று இல.கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

பா.ஜ.க. மாநில தலைவராக இருந்த டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன், தெலங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அவர் பா.ஜ.க. தலைவர் பதவியை ராஜினாமா செய்து, கட்சி உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகினார். இதையடுத்து, பா.ஜ.க.வின் புதிய தலைவர் யார் என்று அக்கட்சியில் மட்டுமல்ல, தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம், அமித்ஷா யாரை தேர்வு செய்வார்? 2021 தேர்தலில் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க அவர் என்ன செய்வாரோ என்ற யூகங்கள்தான் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம், ராகவன் என்று பல பெயர்கள் தலைவர் பதவிக்கு அடிபட்டு வருகிறது.

இந்நிலையில், சேலத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன் அளித்த பேட்டியில் கூறியதாவது:

பாஜகவில் மூத்த தலைவர்கள் பலர் உள்ளனர். அவர்களுக்கு கட்சியின் அமைப்பு தேர்தல் குறித்து நன்கு தெரியும். எனவே, தற்போது இடைக்காலத் தலைவரை அகில இந்திய கட்சித் தலைமை நியமிக்க வேண்டும். டிசம்பர் மாதத்தில் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற வேண்டும்.

நாட்டின் பொருளாதாரம் குறித்து, மத்திய அரசுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அறிவுரை கூறுகிறார். மத்திய அரசை குறை கூறும் பொறுப்பை மன்மோகன்சிங்கிடம் காங்கிரஸ் ஒப்படைத்துள்ளது. ஆனால், அந்த கட்சிக்குள் ‘மோடி டீம்’ உருவாகியுள்ளது. அந்த டீம், பிரதமரை புகழ்ந்து வருகிறது.

இவ்வாறு இல.கணேசன் கூறினார்

More News >>