சந்திரயானில் இருந்து விக்ரம் லேண்டர் பிரிப்பு: செப்.5ல் நிலவில் இறங்கும்

சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து நிலவை ஆய்வு செய்யவிருக்கும் விக்ரம் லேண்டர், வெற்றிகரமாக பிரித்து விடப்பட்டது. செப்.5ம் தேதியன்று இந்த விக்ரம் லேண்டர், நிலவின் மேற்பரப்பில் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய விண்வெளிக் கழகம்(இஸ்ரோ), நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் ஏவியது. புவி வட்டப் பாதையில் சுற்றி வந்த சந்திரயான்-2, ஆகஸ்ட்2ம் தேதியன்று நிலவின் வட்டப் பாதைக்கு அனுப்பப்பட்டது. நிலவில் இறங்கும் வரை கொஞ்சம், கொஞ்சமாக அதை நெருங்கும் வகையில் அடுத்தடுத்த வட்டப்பாதைகளில் சந்திரயான் இறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

கடந்த 21ம் தேதியன்று அடுத்த வட்டப்பாதைக்கு சந்திரயான் மாற்றப்பட்டது. அந்த பாதையில் சுற்றிய சந்திரயான் விண்கலம், நிலவின் தென் துருவப் பகுதியில் உள்ள மேற்பரப்பை பல கோணங்களில் படம் பிடித்து அனுப்பியது. நிலவின் மேற்பரப்பில் உள்ள பள்ளங்களுக்கு விண்வெளி விஞ்ஞானிகளின் பெயர்களை சூட்டி, அந்த பள்ளங்களின் படங்களை இஸ்ரோ வெளியிட்டது.

இதைத் தொடர்ந்து, சந்திரயான் விண்கலம் கடந்த 28ம் தேதி காலை 9 மணி 4 நிமிடத்திற்கு நிலவின் சுற்றுவட்டப் பாதையில் 3வது இடத்திற்கு முன்னேறியது. கடந்த 30ம் தேதியன்று 4வது இடத்திற்கு மாற்றப்பட்டது. செப்டம்பர் 1ம் தேதியன்று சந்திரயானில் இருந்து லேண்டர் விக்ரமை பிரிப்பதற்கான ஆயத்தப் பணிகள் நடந்தது.

இந்நிலையில், இன்று(செப்.2) பகல் 1.15 மணிக்கு சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து லேண்டர் விக்ரம், வெற்றிகரமாக பிரித்து விடப்பட்டது. 3, 4 தேதிகளில் லேண்டர் விக்ரம், நிலவில் இறங்குவதற்கு உரிய மேப்களை படம் பிடித்து இஸ்ரோ கட்டுப்பாட்டறைக்கு அனுப்பும். அந்த பகுதி லேண்டரின் செயல்பாடுக்கு பாதுகாப்பானதா என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆய்வு செய்வார்கள். வரும் 5ம் தேதி அதிகாலை 1.55 மணிக்கு லேண்டர் விக்ரம், நிலவில் இறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதைத் தொடர்ந்து, நிலவின் தென்துருவத்தில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள லேண்டர் விக்ரம் தகவல்களை அனுப்பத் தொடங்கும். செப்டம்பர் 5ம் தேதியை இஸ்ரோ விஞ்ஞானிகள் மட்டுமின்றி மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

More News >>