முதல் ரபேல் விமானம் வருகை: பிரான்சில் செப்.19ல் விழா.. ராஜ்நாத்சிங் பங்கேற்பு

பிரான்சில் இருந்து இந்தியாவுக்கு வாங்கப்படும் ரபேல் போர் விமானங்களில் முதல் விமானத்தை, இந்திய விமானப்படையில் சேர்க்கும் நிகழ்ச்சி, வரும் 19ம் தேதி நடைபெறவுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் இருந்து இந்திய விமானப்படைக்கு 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு கடந்த 2016ம் ஆண்டில் மோடி அரசால் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி, 3 ஆண்டுகளுக்குள் முதல் விமானம் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, வரும் 19ம் தேதியன்று முதல் ரபேல் போர் விமானத்தை இந்திய விமானப் படையில் சேர்க்கும் விழா, பிரான்ஸ் நாட்டின் மெரிக்நாக் நகரில் நடைபெறவுள்ளது. இந்தியாவின் ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் இந்த விழாவில் கலந்து கொள்கிறார். இதைத் தொடர்ந்து, முதல் கட்டமாக 4 ரபேல் போர் விமானங்கள் அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதத்தில் வந்து சேரும்.

மீதியுள்ள போர் விமானங்கள் வரும் 2022ம் ஆண்டுக்குள் சப்ளை செய்யப்படும் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. ரூ.55 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ரபேல் விமானங்களை வாங்குவதில் ஊழல் நடந்துள்ளதாக, நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் குற்றம்சாட்டியது. நாடாளுமன்றத்திலும் இது பற்றி பேசப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More News >>