எண்ணெய் துறையில் ரஷ்யாவுடன் உடன்பாடு: புடினுடன் மோடி சந்திப்பு
ரஷ்யாவிடம் எண்ணெய், ஹைட்ரோ கார்பன் வாங்கிக் கொள்வது தொடர்பாக இந்தியா ஒப்பந்தம் செய்யவுள்ளது. ரஷ்யாவின் கிழக்கு பிராந்திய பொருளாதார மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, நாளை ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து பேசுகிறார்.பிரதமர் மோடி, செப்.4, 5 தேதிகளில் ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் உள்ள விளாடிவோஸ்டாக் நகருக்கு செல்கிறார். அங்கு கிழக்கு பொருளாதார அமைப்பின் மாநாட்டில் தலைமை விருந்தினராக பங்கேற்று உரையாற்றுகிறார்.
இதன்பின், ரஷ்ய அதிபர் புடினை அவர் சந்தித்து பேசுகிறார். இது குறித்து இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கோகலே கூறுகையில், ‘‘எண்ணெய் மற்றும் எரிவாயுவுக்காக வளைகுடா நாடுகளை மட்டுமே நம்பியிருக்காமல் புதிய வாய்ப்புகளை இந்தியா தேடி வருகிறது. அந்த வகையில் ரஷ்யாவில் எண்ணெய், எரிவாயு, ஹைட்ரோ கார்பன் எடுத்து வாங்கிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட உள்ளது.
இதற்கான வாய்ப்புகள் குறித்து ரஷ்ய அதிபர் புடினுடன் மோடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்தியாவில் தொழில் கூட்டமைப்பைச் சேர்ந்த 50 பேர் குழுவும் ரஷ்யாவுக்கு சென்று எண்ணெய் துறையில் உள்ள வாய்ப்புகள் பற்றி பேசவிருக்கிறது. மேலும், திறன்மிக்க தொழிலாளர்களை ரஷ்யாவுக்கு அனுப்பவும் யோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கு ரஷ்யாவுடன் தொழிலாளர் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இவ்வாறு விஜய் கோகலே தெரிவித்தார்.
ரஷ்யா ஏற்கனவே தமிழகத்தின் கூடங்குளத்தில் 6 அணு உலைகள் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மேலும் 6 அணு உலைகள் அமைத்து தரவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதற்கான இடங்களை இந்திய அரசு இன்னும் தேர்வு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.