தங்கம் விலை உயர்வு: ரூ.30 ஆயிரத்தை எட்டுகிறது
தங்கம் ஒரு சவரன் ரூ.30 ஆயிரத்தை எட்டுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த ஒரு மாதமாகவே உயர்ந்து கொண்டே செல்கிறது. இம்மாதம் 2ம் தேதி ஒரே நாளில் பவுனுக்கு ரூ.584 உயர்ந்து, சவரன் விலை முதல்முறையாக ரூ.27 ஆயிரத்தைத் தாண்டியது. அன்று பவுன் ரூ.27,064க்கு விற்றது.
இதன்பின், ஒரு வாரத்தில் தங்கம் விலை கொஞ்சம், கொஞ்சமாக அதிகரி்த்தது. ஆக. 7ம் தேதியன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.568 அதிகரித்து, சவரன் விலை ரூ.28,352க்கு விற்றது. இதே போல், ஆகஸ்ட் மாதம் முழுவதுமே கிராமுக்கு பத்து ரூபாய், இருபது ரூபாய் உயர்ந்து கொண்டே வந்தது.
ஆகஸ்ட் 30ம் தேதியன்று கிராம் ரூ.3689க்கும், ஆக.31ம் தேதியன்று கிராம் ரூ.3691க்கும், நேற்று(செப்.2) கிராம் ரூ.3695க்கும் விற்றது. இன்று(செப்.3) காலையில் கிராமுக்கு ரூ.23 அதிகரித்து ரூ.3718 ஆனது. அதாவது, நேற்ற ஒரு சவரன் ரூ.29,560 விற்பனையானது. இன்று அது ரூ.29,744 ஆக உயர்ந்துள்ளது. இதே போல், தினமும் இருபது, முப்பது ரூபாய் உயர்ந்தால் கூட இந்த வாரத்திற்குள் சவரன் விலை ரூ.30 ஆயிரத்தை தொட்டு விடலாம்.இது குறித்து தங்க நகை வியாபாரிகள் கூறுகையில், ‘‘சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஏற்ற இறக்கமாக காணப்படுகிறது. அதற்கு ஏற்ப இங்கும் விலைகளில் மாற்றம் காணப்படுகிறது. சென்னை மார்க்கெட்டில் ஒரு வாரத்திற்்குள் ஒரு சவரன் விலை ரூ.30 ஆயிரத்தை எட்டுவதற்கான வாய்ப்பு உள்ளது’’ என்றனர்.