ராட்சசி படத்தை பாராட்டிய மலேசிய கல்வி அமைச்சர்!

ஜோதிகா நடிப்பில் சமீபத்தில் வெளியான ராட்சசி திரைப்படம், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை பார்த்த மலேசிய கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக் திரைப்படம் மற்றும் படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார்.

ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்று ஒரு அரசு பள்ளிக்கு தலைமை ஆசிரியராக பதவி ஏற்கும் ஜோதிகா, தனது பள்ளியை சமூக பிரச்னைகள் மற்றும் அரசியல்வாதிகளிடம் இருந்து எப்படி போராடி மீட்டார் என்பதே படத்தின் கதை.

இந்த படத்தை சமீபத்தில் பார்த்த மலேசியா நாட்டின் கல்வி அமைச்சர் மஸ்லி மாலிக், தனது ட்விட்டர் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில், இந்த படம் குறித்தும், இந்த படத்தில் சொல்லும் கல்வி குறித்தும் வெகுவாக பாராட்டியுள்ளார். வெளிநாட்டில் இருந்து ராட்சசி படத்திற்கு இப்படி ஒரு அங்கீகாரம் கிடைத்திருப்பது, இயக்குநர் கெளதம் ராஜ், ஜோதிகா மற்றும் படக்குழுவினருக்கு புது உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது.

இது போன்ற அங்கீகாரங்கள் படக்குழுவுக்கு உற்சாகத்தை தருவது மட்டுமின்றி, இதுபோன்ற நல்ல படங்கள் சமூகத்திற்காக தயாரிக்கப்பட்டும், திரைக்கும் வரும் என்பதால், சினிமா உலகினர், இந்த செயலை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

More News >>