ஐந்து பர்சன்ட் தெரியுமா? ப.சிதம்பரம் கமென்ட் : பதிலுக்கு சாமி அடித்த கிண்டல்
சி.பி.ஐ. காவலில் வைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரம் இன்று(செப்.3) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது பத்திரிகையாளர்களிடம், ‘‘ஐந்து சதவீதம் தெரியுமா?’’ என்று பொருளாதார சரிவை சுட்டிக்காட்டி மத்திய அரசை கமென்ட் அடித்தார். அதற்கு சுப்பிரமணிய சாமி பதிலடி கொடுத்துள்ளார்.
ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு ரூ.305 கோடி அந்நிய முதலீடு வந்ததற்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு செய்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார். சி.பி.ஐ. காவலில் வைக்கப்பட்டுள்ள அவர், இன்று டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது காவலை ஒரு நாளைக்கு நீட்டித்த நீதிபதி, அவர் தாக்கல் செய்த இடைக்கால ஜாமீன் மனு விசாரணையை நாளை பிற்பகல் விசாரிப்பதாக கூறினார்.
இதற்கிடையே, சி.பி.ஐ. காவலை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி பானுமதி அதை விசாரித்து செப்டம்பர் 5ம் தேதிக்கு தள்ளி வைத்தார். மேலும், அது வரை சிதம்பரத்தை திகார் சிறைக்கு அனுப்பாமல், சி.பி.ஐ. காவலில் வைத்திருக்கவும் உத்தரவிட்டார்.
இந்நிலையில், சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு வெளியே வந்த சிதம்பரத்திடம், இத்தனை நாட்களாக சி.பி.ஐ. காவலில் இருப்பது பற்றி நிருபர்கள் கருத்து கேட்டனர். அவர்களின் கேள்விக்கு சிதம்பரம் சிரித்து கொண்டே ‘ஐந்து பர்சன்ட் தெரியுமா?’ என்று கேட்டார். உடனே அவர் எதை கிண்டலடிக்கிறார் என்பதை புரிந்து கொண்ட புத்திசாலி நிருபர்கள், ‘‘ஜி.டி.பி சரிவைத்தானே சொல்கிறீர்கள்’’ என்று கேட்டனர். அதற்கு சிதம்பரம், ஐந்து விரல்களை காட்டி, ‘ஐந்து பர்சன்ட், ஜி.டிபி...’’ என்று கூறி விட்டு நகர்ந்தார்.
அதாவது, ஜி.டி.பி. என்பது உள்நாட்டு உற்பத்தி விகிதம். இது கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, ஏப்ரல்-ஜூன் காலாண்டில் வெறும் 5 சதவீதமாக சரிந்து விட்டது. இந்த அளவுக்கு பொருளாதார சரிவுக்கு மத்திய அரசுதான் காரணம், அதை மறைக்கவே என்னை கைது செய்திருக்கிறார்கள் என்ற ரீதியில் சிதம்பரம் பேசியிருக்கிறார்.
இதற்கு பின்னர், டைம்ஸ் நவ் டி.வி. நிருபர் இது பற்றி சுப்பிரமணிய சாமியிடம் கேள்வி கேட்டார். அதற்கு சாமி, ‘‘சிதம்பரம் எந்த 5 பர்சன்ட்டை கூறுகிறார்? பொருளாதார சரிவு 5 சதவீதம் என்று கூறுகிறாரா? அல்லது அன்னிய முதலீடுகளி்ல் 5 சதவீத கமிஷன் வாங்கியதை கூறுகிறாரா?’’ என்று கிண்டலடித்தார்.