வியன்னாவில் ஒரு வீடு வாங்கலாமா! வாழ்வதற்கு ஏற்ற நகரங்களில் முதலிடத்தில் வியன்னா!
உலகில் வாழ்வதற்கு ஏற்ற நகரங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. இந்த முறை மெல்போர்ன் நகரத்தை பின்னுக்குத் தள்ளி வியன்னா முதலிடத்தை பிடித்துள்ளது.
உலகில் வாழ்வதற்கு ஏற்ற நகரங்களின் பட்டியலை பொருளாதார புலனாய்வு குழு ஆண்டுதோறும் ஆய்வு செய்து வெளியிடும். மொத்தம் 140 நாடுகளில் நடத்தப்படும் இந்த ஆய்வு அறிக்கை தற்போது, வெளியிடப்பட்டுள்ளது. இதில், கடந்த ஏழு ஆண்டுகளாக முதலிடம் வகித்து வந்த ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரத்தை பின்னுக்குத் தள்ளி வியன்னா முதலிடத்தை பிடித்துள்ளது.
கல்வி, சுகாதாரம், அரசியல், வாழ்க்கை தரம், ஆரோக்கியம் உள்ளிட்ட முக்கியமான அடிப்படை ஆதாரங்கள் ஒரு நகரத்தில் எந்த அளவுக்கு செம்மையாகவும் சிறப்பாகவும் உள்ளது என்பதை இந்த ஆய்வு கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்யும்.
இந்த ஆய்வில் மொத்தம் 99.1 புள்ளிகள் மதிப்பெண் பெற்று வியன்னா முதலிடத்தை எட்டியுள்ளது.
ஆஸ்திரியா நாட்டின் தலைநகரமான வியன்னா, உலகில் வாழ்வதற்கான சிறந்த இடமாக தேர்வு செய்யப்பட்டிருப்பதை அறிந்த வியன்னா வாசிகள் இந்த சந்தோஷத்தை கேக் வெட்டி கொண்டாடி வருகின்றனர்.
இந்த பட்டியலில் 125வது இடத்தில் இந்தியாவின் தலைநகர் டெல்லி இடம்பிடித்துள்ளது. இந்தியாவில் இருந்து இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ள ஒரே நகரமும் டெல்லி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிலேயே வாழ தகுதியற்ற நகரமாக கருதப்படுகிற டெல்லியை எப்படி இவர்கள் 125வது இடத்திற்கு தேர்வு செய்தார்கள் என்பது தான் இதில், ஆச்சர்யமாக இருக்கிறது.
காற்று மாசு, வாகன நெரிசல், வன்முறை என நாளுக்கு நாள் தலைநகரம் அவதி அடைந்து வரும் சூழலில் இந்த பட்டியலில் இடம் கிடைத்துள்ளது சற்று ஆறுதலான விஷயம் தான்.