உதவியாளர் கன்னத்தில் அறைந்த சித்தராமையா : காங்கிரசுக்கு அடுத்த சோதனை..

கர்நாடக காங்கிரசுக்கு சோதனையான காலம் இது. அந்த கட்சியின் மூத்த தலைவர் டி.கே.சிவக்குமார் கைதான நிலையில், சித்தராமையா ஒருவரை கன்னத்தில் அறைந்த காட்சி வைரலாகி, அக்கட்சிக்கு மேலும் சோதனையை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடகாவில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்த ஆட்சியில் பங்கேற்க முடியாமல் போன காங்கிரஸ் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவுக்கு, முதலமைச்சர் குமாரசாமி மீது அதிருப்தி ஏற்பட்டது. இந்நிலையில், காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 13 பேர் விலகியதால் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது.

இதையடுத்து எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தது. ஆட்சி கவிழ்ந்ததற்கு சித்தராமையாவே காரணம் என்று குமாரசாமியும், தேவகவுடாவும் குற்றம்சாட்டினர். பதிலுக்கு சித்தராமையா, மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியினரை ஆபாசமாக விமர்சித்தார்.

இந்நிலையில், குமாரசாமி ஆட்சியை காப்பாற்ற போராடி, பாஜகவுக்கு கடும் எரிச்சலை தந்த முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டார். இதனால், கர்நாடகாவில் காங்கிரசார் கொதிப்படைந்துள்ளனர். பெங்களூரு உள்ளிட்ட சில இடங்களில் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே, மைசூரு விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து விட்டு சென்ற சித்தராமையா, அங்கு தனது உதவியாளர் மீது திடீர் கோபம் கொண்டார். உதவியாளரின் கன்னத்தில் பளார் என்று அவர் அறைந்த காட்சி, டிவி கேமராக்களில் பதிவானது. தற்போது இந்த காட்சி, வைரலாக பரவி வருகிறது.

எதற்காக உதவியாளரை சித்தராமையா அடித்தார் என்பது தெரியவில்லை. இருந்தாலும் அவர் செய்தது தவறு என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

More News >>