போதையில் பைக் ஓட்டியவருக்கு ரூ.16 ஆயிரம் அபராதம் : தூத்துக்குடி போலீஸ் அதிரடி
டெல்லியை அடுத்து தூத்துக்குடியில் போக்குவரத்து விதிமீறலுக்காக ஒரு வாலிபருக்கு ரூ.16 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர் போக்குவரத்து போலீசார்.
போக்குவரத்து விதிமீறல்களுக்கு ரூ.1000 முதல் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கும் வகையில் வாகனப் போக்குவரத்து சட்டத்தில் புதிய திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த மோட்டார் வாகனத் திருத்தச் சட்டம், செப்டம்பர் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது.
கடந்த வாரம், டெல்லியை அடுத்துள்ள குருகிராமில் தினஷே் மதன் என்பவர் மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அவர் ஹெல்மெட் அணியாததால், போக்குவரத்து போலீசார் அவரை நிறுத்தினர். அவரிடம் டிரைவிங் லைசென்ஸ், ஆர்.சி.புக், இன்சூரன்ஸ் எதுவும் இல்லை. இதையடுத்து, அவருக்கு டெல்லி போலீசார் ரூ.23 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
இந்நிலையில், தமிழகத்தின் தூத்துக்குடியில் ஒருவருக்கு ரூ.16 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி கால்டுவெல் காலனியைச் சேர்ந்த சண்முகநாதன்(29) என்பவர், மோட்டார் பைக்கில் சென்ற போது, போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் அவரை நிறுத்தி சோதனை செய்தார். அப்போது, சண்முகநாதன் போதையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அவரிடம் டிரைவிங் லைசென்ஸ் இல்லை. ஹெல்மெட்டும் அணியவில்லை. இதையடுத்து, அவரிடம் போதையில் வண்டி ஓட்டியதற்காக ரூ.10 ஆயிரம், லைசென்ஸ் இல்லாததற்காக ரூ.5 ஆயிரம், ஹெல்மெட் போடாததற்காக ரூ.1000 என்று ரூ.16 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
இதே போல், தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களின் அருகே போக்குவரத்து போலீசார் தங்கள் வேட்டையைத் துவங்குவார்கள் என்று தெரிகிறது. குடித்து விட்டு வண்டி ஓட்டுபவர்கள் ரூ.10 ஆயிரம் அபராதம் கட்ட வேண்டியிருக்கும் அல்லது போலீசாருக்கு குறைந்தது ஆயிரமாவது லஞ்சமாக அழ வேண்டியிருக்கும். எனவே, வண்டியை விட்டு விட்டு பாருக்கு செல்லுங்கள் ‘குடி’ மக்களே!