தர்மேந்திர பிரதானை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற தங்கமங்கை பி.வி. சிந்து!
பாட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்று புதிய சாதனை படைத்த பி.வி. சிந்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிராதனை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
ஸ்விட்சர்லாந்தில் நடந்து முடிந்த 25-வது உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், பங்கேற்ற இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தார்.
இதற்குமுன் வெள்ளி மங்கையாக திகழ்ந்த பி.வி. சிந்து, முதல்முறையாக தங்க மங்கையாக ஜொலித்து வருகிறார்.
உலக அரங்கில் இந்தியாவை தலை நிமிர வைத்து பெருமை சேர்த்த பி.வி.சிந்து டெல்லி திரும்பியபோது, அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதன் பின்னர், டெல்லியில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை இன்று சந்தித்த பி.வி. சிந்து அவரிடம் இருந்து வாழ்த்துக்களை பெற்றார்.
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி, விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மற்றும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்டோரையும் சந்தித்து வாழ்த்து பெற்றார்.