சிதம்பரம் விடுதலை ஆவாரா? உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிபிஐ காவலில் உள்ள ப.சிதம்பரம் விடுதலை ஆவாரா என்பது உச்சநீதிமன்றம், சிபிஐ நீதிமன்றம் இன்று அளிக்கவுள்ள உத்தரவுகளில் தெரியும்.
ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு ரூ.305 கோடி அந்நிய முதலீடு வந்ததற்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு செய்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அவரை சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதித்தது. கடந்த 15 நாட்களாக சிபிஐ தலைமை அலுவலகத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ள அவர் தாக்கல் செய்த மனுக்களின் மீது சிறப்பு நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது.
சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவினர் தொடுத்துள்ள ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கில் முன்ஜாமீன் கேட்டு அவர் தாக்கல் செய்த மனு மீது சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிடுகிறது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சி.பி.ஐ. காவலை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் தாக்கல் செய்த மனுவின் மீதும் இன்று உத்தரவு வெளியாக உள்ளது. எனவே, ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரம், திகார் சிறைக்கு செல்வாரா என்பதும், ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கில் அவர் கைது செய்யப்படுவாரா என்பதும் அல்லது அவர் விடுதலை ஆவாரா என்பதும் இன்று தெரியும்.