கப்பலில் ரஷ்யாவுக்கு வேலைக்கு போகலாம் : சென்னை-விளாடிவோஸ்டோக் பயணம்..
சென்னையில் இருந்து ரஷ்யாவின் கிழக்கு கடலோரப் பகுதியான விளாடிவோஸ்டோக் வரை கப்பல் விடுவதற்கு இந்தியாவும், ரஷ்யாவும் ஒப்பந்தம் செய்துள்ளன. மேலும், இந்திய தொழிலாளர்களை ரஷ்யாவுக்கு வேலைக்கு அனுப்புவதற்கும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2 நாட்களாக ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற் கொண்டிருந்தார். அப்போது அவர் ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் உள்ள விளாடிவோஸ்டோக் துறைமுக நகருக்கு சென்றிருந்தார். அங்கு ரஷ்ய அதிபர் புடினுடன் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இருநாடுகளுக்கும் இடையே வர்த்தகம், பாதுகாப்பு, விண்வெளி, எண்ணெய்-எரிவாயு, அணுசக்தி உள்பட பல்வேறு துறைகளில் 15 ஒப்பந்தகள் கையெழுத்திடப்பட்டன.
அவற்றில் முக்கியமானது, சென்னையில் இருந்து விளாடிவோஸ்டோக் நகருக்கு கப்பல் சேவையை துவக்குவதற்கான ஒப்பந்தமாகும். இதன்படி, இரு துறைமுகங்களுக்கும் இடையே கடல்சார் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும், ரஷ்யாவுக்கு திறன்மிக்க இந்திய தொழிலாளர்களை வேலைக்கு அனுப்புவது தொடர்பாகவும் புடினுடன் மோடி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே கூறுகையில், ‘‘ரஷ்யாவுக்கு இந்திய தொழிலாளர்களை அனுப்புவதற்கான முயற்சிகளை பிரதமர் மோடி மேற்கொண்டுள்ள சூழ்நிலையில், சென்னை-விளாடிவோஸ்டோக் கப்பல் சேவை துவங்கப்படுவது மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம்’’ என்றார்.
எனவே, ரஷ்யாவுக்கு வருங்காலத்தில் கப்பலில் பயணம் செய்யலாம். அத்துடன் வேலைக்கும் செல்லும் சூழல் ஏற்படும்.
விளாடிவோஸ்டோக் நகரில் இருந்து ஸ்வெஸ்டா கப்பல் கட்டும் தளத்திற்கு பிரதமர் மோடி சென்றார். ரஷ்ய அதிபர் புடினும், மோடியும் கப்பலில் பயணம் செய்து அங்கு சென்றனர். ஸ்வெஸ்டா கப்பல் கட்டும் தளம் மிக பிரம்மாண்டமானது. அதை மோடி பார்வையிட்டார். அப்போது, கப்பல் கட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகளுடனும் அவர் கலந்துரையாடி விட்டு திரும்பினார்.