ஜாகீர் நாயக்கை ஒப்படைக்குமாறு மலேசிய பிரதமரிடம் மோடி பேச்சு
இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட மதப் போதகர் ஜாகீர் நாயக்கை ஒப்படைக்க வேண்டும் என்று மலேசியப் பிரதமர் மகாதீர் முகமத்திடம் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.
வங்கதேச நாட்டின் தலைநகர் டாக்காவில் கடந்த 2016ம் ஆண்டில் ஒரு ஓட்டல் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய மாணவி தருஷி ஜெயின் உள்பட 22 பேர் உயிரிழந்தனர். தீவிரவாதிகளில் ஒருவரன ரோஹன் இம்தியாஸ் என்பவர் மும்பையை சேர்ந்த இஸ்லாமிய மதப் போதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சுக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். மேலும், ஜாகீர் நாயக்கின் பேச்சால்தான் ரோஹன் தீவிரவாதியாக மாறியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
இதையடுத்து, ஜாகீர் நாயக் நடத்திய பீஸ் டி.வி. முடக்கப்பட்டது. என்.ஐ.ஏ. அவருக்கு சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து, அவரை மும்பை நீதிமன்றம் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது.
இந்நிலையில், ரஷ்யாவில் நடைபெறும் கிழக்கு பிராந்திய பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி சென்றுள்ளார். மாநாட்டுக்கு இடையே அவர் ரஷ்ய அதிபர் புடின், ஜப்பான் பிரதமர் ஷின்சே அபே உள்ளிட்ட தலைவர்களை தனித்தனியாக சந்தித்து பேசினார்.
மலேசியப் பிரதமர் மகாதிர் முகமத்தை பிரதமர் மோடி சந்தித்து பேசிய போது, இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியான ஜாகீர் நாயக்கை விசாரணைக்கு உட்படுத்துவதற்்காக ஒப்படைக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார்.
இது குறித்து, மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கோகலே கூறுகையில், ‘‘ஜாகீர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு மலேசியப் பிரதமரிடம் மோடி கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக, இருநாட்டு அதிகாரிகளும் தொடர்ந்து விவாதிக்க இருக்கிறார்கள்’’ என்றார்.