4 பேர் பயங்கரவாதிகளாக அறிவிப்பு: இந்திய நடவடிக்கைக்கு யு.எஸ். ஆதரவு

பாகிஸ்தானைச் சேர்ந்த மசூத் அசார், ஹபீஸ் சயீத், ஜாகீர் ரெஹ்மான் லக்வி, தாவூத் இப்ராகிம் ஆகியோரை பயங்கரவாதிகளாக இந்தியா அறிவித்திருப்பதற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில்(உபா) சமீபத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. பழைய சட்டத்தின் கீழ் ஒரு இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து இந்தியாவில் அதன் செயல்பாட்டுக்கு தடை விதிக்கலாம். மேலும், அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கலாம். புதிய சட்டத்தின்படி, ஒரு இயக்கத்தை மட்டுமின்றி, தனி ஒருவரைக் கூட பயங்கரவாதியாக அறிவிக்கலாம். அப்படி அறிவித்தால், அவர் மீது எந்நேரத்திலும் நடவடிக்கை எடுக்கலாம்.

இந்நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் மசூத் அசார், ஹபீஸ் சயீத், ஜாகிர் ரெஹ்மான் லக்வி, தாவூத் இப்ராகிம் ஆகியோரை உபா சட்டத்தின் கீழ் பயங்கரவாதிகளாக அறிவித்து மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று நோட்டிபிகேஷன் வெளியிட்டது. எனவே, அவர்கள் மீது எந்நேரத்திலும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள முடியும்.

இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறை துணைச் செயலர் ஆலிஷ் வெல்ஸ் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘‘இந்தியாவின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். இந்தியாவின் புதிய சட்டம், பயங்கரவாதிகளை ஒடுக்குவதில் இந்தியாவுடன் அமெரிக்காவும் இணைந்து செயல்படும் வாய்ப்புகளை அதிகப்படுத்தும்’’ என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு தீவிரவாத தாக்குதல்களிலும் தாவூத் இப்ராகிம் உள்பட 4 பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு உள்ளது. இவர்களுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்து வருகிறது. ஆனாலும், அவர்களை விசாரணைக்கு கொண்டு வருவதற்கு சர்வதேச அளவில் இந்தியா முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

More News >>