திகார் சிறையில் சிதம்பரம் அடைப்பு : செப்.19ம் தேதி வரை காவல்
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை வரும் 19ம் தேதி வரை சிறைக் காவலில் வைக்குமாறு டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு ரூ.305 கோடி அந்நிய முதலீடு வந்ததற்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு செய்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அவரை சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதித்தது. கடந்த 15 நாட்களாக சிபிஐ தலைமை அலுவலகத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்த அவர் தாக்கல் செய்த மனுக்களின் மீது சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தன.
சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவினர் தொடுத்துள்ள ஏர்செல் மேக்ஸிஸ் முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் கேட்டு அவர் தாக்கல் செய்த மனுவை சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் தன்னை சி.பி.ஐ. காவலுக்கு அனுப்பியதை எதிர்த்து சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்தது. அதேபோல், ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கப்பிரிவு ஒரு வழக்கு தொடுத்திருந்தது. அதில் முன் ஜாமீன் கேட்டும் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்நிலையில், இன்று காலையில் அந்த முன் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பொருளாதாரக் குற்றங்களில் மிக அரிதாகவே முன் ஜாமீன் அளிக்கப்படும் என்றும் முன் ஜாமீன் அளித்தால் விசாரணை பாதிக்கப்படும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது.
இதற்கிடையே, சிபிஐ காவல் முடிந்து சிதம்பரம் இன்று பிற்பகலில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவருக்கு சிபிஐ காவல் முடிந்ததால், ஜாமீனில் விடுவிக்குமாறு அவரது வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர். அதை நீதிபதி ஏற்கவில்லை. அதையடுத்து, அவரை அமலாக்கப்பிரிவு வழக்கின் விசாரணைக்கு அனுப்புமாறு என்றும் வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், அமலாக்கப்பிரிவு வழக்கில் சிதம்பரம் கைது செய்யப்படாததால், அதையும் நீதிபதி ஏற்கவில்லை. அமலாக்கப்பிரிவினரும் இன்று சிதம்பரத்தை கைது செய்ய எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.
இதனால், சிதம்பரத்தை ஜாமீனில் விடுவிப்பது அல்லது சிறைக்காவலில் வைப்பது என்ற இரண்டில் ஒரு முடிவை நீதிபதி எடுக்க வேண்டியதாயிற்று. இதையடுத்து, சிதம்பரத்தை வரும் 19ம் தேதி வரை சிறைக்காவலில் வைக்குமாறு நீதிபதி அஜய்குமார் குஹார் உத்தரவிட்டார். சிதம்பரத்திற்கு மருந்துகள் மற்றும் வெஸ்டர்ன் டாய்லெட் உள்பட வசதிகள் செய்து தர வேண்டுமென்றும், திகார் சிறையில் தனி செல் ஒதுக்கி பாதுகாப்பு தர வேண்டுமென்றும் கோரிக்கை விடப்பட்டது. இதற்கு நீதிபதி அனுமதி அளித்தார். இதையடுத்து, சிதம்பரம் திகார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.