எனை நோக்கி பாயும் தோட்டாவுக்கு என்ன தான் ஆச்சு?

தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா நாளை செப்டம்பர் 6ம் தேதி வெளியாகும் என கடைசி நம்பிக்கையாக ரிலீஸ் டிரைலர் எல்லாம் விட்டார்கள். ஆனால், நாளையும் படம் ரிலீஸ் இல்லை என்ற அறிவிப்பு தனுஷ் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ரிலீஸ் தேதி பிரச்னையால் சிக்கித் தவித்து வந்த தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா, சில கடன் பிரச்சனை காரணங்களால் ரிலிஸ் தேதி தள்ளிப்போய்கொண்டே வந்தது. இறுதியாக, இந்த படம் நாளை செப்.,6ம் தேதி வெளியாகும் என அறிவித்தனர். ஆனால், நாளை ஆர்யாவின் மகாமுனி மற்றும் சித்தார்த், ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள சிவப்பு மஞ்சள் பச்சை ஆகிய இரு திரைப்படங்கள் மட்டுமே வெளியாகின்றன என்ற அறிவிப்பும், கடைசி நேரத்தில் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் ரிலீசுக்கு கோர்ட் தடை விதித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

படத்திற்கு ஃபைனான்ஸ் கொடுத்த சிலர் நீதிமன்றத்தை நாடி சென்றதால் படத்தின் ரிலீஸ் மீண்டும் தடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் வெளியாகாத காரணத்தால் தனுஷ் ரசிகர்கள் மீண்டும் அப்செட் ஆகியுள்ளனர்.

கெளதம் மேனன் தான் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதற்கு முழு முதற் காரணம் என்ற பேச்சும் கோலிவுட்டில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.

அவர் இயக்கத்தில் உருவான துருவ நட்சத்திரத்தின் கதையும் என்ன ஆனது என்று தெரியவில்லை. மேலும், அவர் தயாரிப்பில் உருவான நெஞ்சம் மறப்பதில்லை படமும் ரிலீஸ் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போது, படம் வெளியாகாததற்கு மன்னிப்பு கேட்டும், விரைவில் சட்ட சிக்கல்களை தீர்த்து ஓரிரு நாளில் படம் வெளியாகும் என்ற அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. 

More News >>